அப்பா ஒரு கேள்வி”


பயல் இப்படி ஆரம்பித்தாலே, டென்ஷனாகும். இன்னிக்கு கீதை படிக்கலாம்னு இருந்தேன். வேறென்ன புத்தகம் பாக்க வேண்டியிருக்குமோ? என்று கவலையோடு அவனை ஏறிட்டேன்.
“கர்மண்யேவ அதிகாரஸ்தே -ன்னு நேத்திக்குச் சொன்னீங்க. ஒரு வொர்க் செய்யமட்டும்தான் ரைட்ஸ் இருக்கு; அதுனோட ரிஸல்ட்டுல இல்லை”ன்னீங்க. அப்ப, எப்படி மோட்டிவேட்டடா இருக்க முடியும்? எனக்கு ரிசல்ட் வரலேன்னா, ஏன் செய்யணும்?”

இத்தனை தமிங்கில வார்த்தைகளைப் போட்டு அவன் பேசுகிறானென்றால், நிஜமாகவே குழம்பியிருக்கிறான் என்பது தெளிவு. வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம், கேள்வியின் தீவிரம் , தெளிவான சிந்தனையை அழுத்திவிட்டது என்பதன் வெளிப்பாடு.


“அப்படி யார் சொன்னா?”

இம்பரேட்டிவ் ,அப்பா! எனக்கு ஒரு ரிஸல்ட் வரலைன்னா, எப்படி சந்தோஷமா வேலை செய்யமுடியும்? கீதை , ’வேலை செய்; பலனை எதிர்பார்க்காதே’ன்னு சொல்றது ஃபிலாஸஃபிக்கலா நன்னா இருக்கலாம்; நாட் ப்ராக்டிகல்”


”இது ஒரு அறிவுப்பிழை” என்றேன். “ நான் ஒரு யானையோட தும்பிக்கையை மட்டும் பார்த்துட்டு, யானைங்கறது ஒரு பெரிய பாம்பு மாதிரி இருக்கும்னு சொல்ற cognitive error. கீதையை முழுசும் படிக்காம ஒரு ஸ்லோகத்தை மட்டும் வைச்சுட்டுச் சொல்லக்கூடாது”

“ஓகே. டெல் மீ மோர்” என்றான். இந்த அளவு ஆங்கிலத்தில் அவன் பொதுவில் பேசுவதில்லை. நல்ல பையனாக என்னிடம் காட்டிக்கொள்ள, யோசித்து, சில தமிழ் வார்த்தைகளை அவ்வப்போது சொல்லுவான். நானும் தெரிந்தே, “பரவாயில்லையே. நல்லா தமிழ் வருதே உனக்கு?” என்பேன். இந்த விளையாட்டு இருவருக்கும் தெரிந்தே ,விளையாடுகிறோம். Games people play…


” வேலை செய்யறவனுக்கு என்ன மன நிலை இருக்கணும்னு 18வது அத்தியாயத்துல சொல்றார் “ வினையின் பலன்மேல் பற்று இல்லாதவனாய், நான் செய்கிறேன், எனது வினை இது என்ற அகங்காரம் இல்லாதவனாய், வினையில் உறுதியுடன், வினையாற்றுவதில் உற்சாகத்துடன் சமமான மனத்துடன், வெற்றி தோல்வியில் தாக்கப்படாதவனாய் இருக்கும் வினையாற்றுபவன் , சாத்வீகமானவன் எனப்படுகிறான்” (18:26)

“இதுல முக்கியமா ரெண்டாவது லைன் உனக்கு. உறுதியோடு, உற்சாகத்தோடு பணி செய்யணும். செய்யற வேலை பிடிச்சிருக்கணும். சந்தோஷமா அதனை முனைப்போடு செய்யணும். அதான் பாய்ண்ட்டு”


“வேலை பிடிச்சிருக்குன்னா, அதுக்காக ரிவார்டு பிடிச்சிருக்ககூடாதுனா , என்னப்பா நியாயம்?”
“ரிவார்டு பத்தி நினைப்பு வந்தா, எதிர்பார்ப்பு வரும். எதிர்பார்த்ததெல்லாம் வாழ்க்கைல நடக்காது. நீ 30% இன்க்ரிமெண்ட் எதிர்பார்த்திருப்பே; வந்து நிக்கறது 15% ஆ இருக்கும். ஒரு சின்ன பரிசு, ஆண்டுவிழாவுல எதிர்பார்த்திருப்பே, வேற எவனுக்கோ கொடுப்பான்கள்.
இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும். ஏமாற்றம் ஆத்திரத்தை உண்டாக்கும். வேலை எதுக்குச் செய்யணும்னு தோணும். வேலைல குவியம் குறையும். அது, தோல்வியில கொண்டுபோய் விடும். இல்ல, மேல இருக்கறவனுக்கு உன் பேர்ல மதிப்பு குறையும். இது விஷச் சுழற்றி.
வேலை செய்யறப்போ அதை மட்டும் பாத்தோம்னு வைச்சுக்கோ, இந்த குவிய நாசம் நடக்காது. செய்யறதை உற்சாகமாச் செய்யணும்னு சொல்றது கீதை. ”
“அப்போ கடவுள் உற்சாகமாச் செய்யறாராப்பா? இத்தனை படைச்சு, காத்து, அழிச்சுன்னு வேலை செய்யறாரே?! ஓ! அவருக்கு கர்மா இல்லைன்னு சொல்வீங்க”

“அப்படியில்ல” புன்னகைத்தேன் “ ஆழ்வார் சொல்றார் “அவனே அந்த வேலையெல்லாம் உற்சாகமாத்தான் செய்யறான்”ங்கறார் . “உவந்த உள்ளத்தனாய் உலகளந்து “,
எத்தனையோ யுகங்களாய் நம்மைப் படைத்துக் காத்துக்கொண்டிருக்கிறான். போரடிக்காமல், சலிப்பில்லாமல் எப்படிச் செய்யறான்? உகந்து செய்யறான், அதுதான் சீக்ரெட்.


“சாலப்பலநாள் உகந்து பல்லுயிர் காப்பான், கோலத்திருமா மகளோடு”
அவனுக்கே வேலை செய்யறதுக்கு உற்சாகம், உவப்புதான் வேண்டியிருக்கு. அப்ப நமக்கு வேண்டாமா?”


“ம்ம்..” என்றவன் எழுந்து போய்விட்டான்.


சிந்தனை கலங்குவது தவறல்ல. வயல், சகதியாய்க் கலங்கி, ஏரின் முனையில் உழப்பட்டு, மண் புரட்டிப் போடப்பட்டபின், விதை தூவுவதுதான் வேளாண்மையின் அடிப்படை.
விதை முளைக்கும் – என்றேனும் ஒருநாள். நம் கடமை, உழுதல், விதை தூவுதல்.
எதிர்பார்ப்பின்றி – உவப்போடு.

2 thoughts on “வினையாற்றுவிதம்

  1. நான் செய்தேன் இது என் கர்மா என்ற அகங்காரம் எப்படி உடைப்பது

    1. நான் என்பது அகங்க்காரம், என் கர்மா, எனது என்பது மமகாரம். அகங்காரம்/மமகாரம் பொதுவில் அழிக்கபடவேண்டியதில்லை, அதுவும் எதில் அழியவேண்டும் என்பதும் ஒரு ஆளுமை. க்ருஹாஸ்த்ரத்தில் அகங்காரம் சில இடங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.நான் இன்னாரின் மகன்/மகள், இன்னாரின் தந்தை/தாய் எனும் உணர்வு கர்மத்தை போதிக்கிறது. இதைச் செய்தேன் என்பதில் பெருமை கொள்ளுமிடத்தில் அகங்க்காரம் தேவையில்லை என பெரியோர் அறிவுறுத்துவர். சித்தர்களுக்கு முழுதும் அழியவேண்டியது, நமக்கு ஒரு கட்டுக்குள் இருப்பது போதுமானது, தேவையும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *