ஜி மெயிலை நேற்றுதான் பல நாட்களுக்குப் பிறகு திறந்தேன். மென்னியை நெறிக்கும் சிறு சிறு வேலைகளில் சொந்த வாழ்வு பல நேரம் மறந்து போகிறது.

இரு மின்னஞ்சல்கள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று 7.83 ஹெர்ட்ஸ் நாவலில் வரும் ஹார்ப் (HAARP) குறித்த கேள்வி .”வாசிப்பவனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? ஒரு மேட்டிமைத்தனம் தெரிகிறது” என்பதாகச் சென்றது. அவருக்கு பதில் எழுதினேன். ” வாசிப்பவர் மேலும் தெரிந்துகொள்ள முயல்வார், ஆவலாக இருப்பார் என்று நினைக்கிறேன். அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் பொய்ப்பதில்லை. இன்றைய இணைய உலகில் வெகு விரைவில் ஹார்ப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள இயலும். அதனை முயற்சிக்காமல், “சரவணன் லாட்ஜ் முதலாளி கல்லாவைத் திறக்குமுன் ஒரு முறை ‘முருகா’ என்றார்” என்று எழுதுவதுதான் நல்லது என்றால் , மன்னிக்கவும், அது வேறு விதமான கதை வகை.’

நான் ஒன்றும் முயற்சிக்க மாட்டேன். எனக்குத் தெரிந்த அளவில் மட்டுமே எழுத்து இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தும். சமூகச் சூழல் சார்ந்த கதைகள், அதற்குக் கரு தரமுடியும்.

அறிவியல் தளக்கதைகள் அப்படியல்ல. நாம் அறிந்தது, இன்னும் அறிய வேண்டியது குறித்து ஒரு இயக்கத்தை நம்மிடம் தூண்ட வேண்டும். நம்மிடம் பல நேரங்களில் கதை வராது; நாம் அதனிடம் தேடிப் போக வேண்டும். குளத்தில் குளிப்பது ஒரு ரகம்; ஓடும் ஆற்றில் குளிப்பது வேறு ரகம். நம்மில் பலருக்கு இது புரிய நாளாகும் எனத் தோன்றுகிறது.

மற்ற கடிதம் சற்றே வித்தியாசமானது. டர்மரின் 384 -ல் அவர் ஒரு நாவலின் அளவுக்கு எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன் என்று தொடங்கியிருந்தார். “ப்ளேட் ரீடர் , மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர், FTP என்பதெல்லாம் தெரிந்திருக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது”

ஓரு கதையில் எனக்குத் தெரிந்தது மட்டுமே வரவேண்டுமென்றால் நாம் எல்.கே.ஜி பாடபுத்தகம் மட்டுமே படிக்க வேண்டும். புதிதாக அறியவேண்டுமென்பதில் ஒரு மெனக்கெடல் தேவை. சுஜாதா அவர்கள் , ‘நைலான் கையிறு” கதையில், சுநந்தாவின் அண்ணன், அவளை சிதையேற்றி வந்ததும் ‘ எஜாக்குலேட்டரி வெயின்-ஐ அறுத்துக்கொண்டு ரத்தம் கொட்ட இறந்து போனான்’ என்று எழுதியிருப்பார். இதை வாசிக்கும்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன். எஜாக்குலேட்டரி வெயின் என்றால் என்ன? வெயின் என்றால்?…

நைலான் கயிறு - சுஜாதா - YouTube

ஒரு டாக்டர் மாமாவிடம் கேட்டது நினைவிருக்கிறது. அவர் புன்னகையுடன் “வெயின் என்றால் சிரை – கெட்ட ரத்தம் ஓடற குழாய். இதேமாதிரி நல்ல ரத்தம் ஓடற தமனிக்கு ஆர்ட்டரி- என்று பெயர் ” என்று சொல்லித்தந்ததும் நினைவிருக்கிறது. எஜாக்குலேட்டரி வெயின் எனக்குப் புரியவில்லை. அவர் சொல்லவுமில்லை.

ஆனால் எதோ மர்மமான ஒன்றை அறுத்திருக்கிறான் என்பது புரிந்தது, அதோடு, தமனியும் சிரையும், அவற்றின் ஆங்கிலப் பெயர்களும். இதற்கு சுஜாதாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். பள்ளியில் படிப்பது மட்டும் படிப்பல்ல. வெளியே படிப்பதில் நல்ல பயன் இருப்பதை நன்றாக உணர்ந்த காலம் அது.

வாசிக்கும் புத்தகம், நீங்கள் அதனைத் தூக்கி எறிவதுடன் முடிந்து போனால், அது ஒரு தாக்கத்தை, ஒரு முன்னேற்றத்தை உங்களிடம் ஏற்படுத்தாது போனால், அது வெறும் “இன்றைக்கு தக்காளி ரசம்” என்ற மெனு போன்ற செய்தி தாங்கி வந்த காகிதக் குப்பை.

உங்களை எழுப்பி, இணையத்தில் தேட வைத்து, நண்பர்களின் மத்தியில் கேட்க வைத்து, ‘சை! என்னடா இது? புரியலையே?” என்று கை பிசைய வைத்தால், அது சிங்கமான உங்களைத் தூண்டி எழுப்பிய ஒரு சர்க்கஸ் மாஸ்ட்டரின் சாட்டை.

பிரபலமான ஒரு ஆங்கில நாவல் கூட, நம்மை வேறு தளங்களில் செய்தி அறியத் தேடவிடாமல் இருந்ததில்லை. இருப்பதில்லை. அவற்றின் வெற்றியே, புத்தகத்தை விட்டு வெளியே நம்மை வாழ்வை வாசிக்க வைப்பதுதான். லூவர் ம்யுஸியத்திற்கு இன்றும் டா வின்சி கோட் புத்தகத்துடன் ,ஆட்கள் வருவதைப் பார்க்க இயலும். அங்கிருக்கும் காவலாளிகள் கூட, எந்த ஓவியத்தை இங்கு பார்க்க முடியாது , இத்தாலிக்குப் போகவேண்டுமென்பதைச் சொல்லித்தருமளவிற்கு புத்தகத்தின் வீச்சு பரவலாயிருக்கிறது. எவரும் அப்படிக் கேட்பதைச் சுமையாகக் கருதவில்லை.

Amazon.com: The Da Vinci Code (Robert Langdon) (9780307474278): Brown, Dan:  Books

இது தமிழ் வாசிப்பு உலகில் வர இன்னும் நாளாகுமெனத் தோன்றுகிறது. ஆனால் வருமென ஒரு நம்பிக்கை இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *