1974 – அம்பாசமுத்திரம்

எதுவும் சொல்வதற்கு முன் அம்மா,  “ மறந்தே போயிடுத்து. டேய்,  முடி வெட்டிண்டு வா.சீக்கிரம் போ. கூட்டம் வந்துடப் போறது”  

‘இன்னிக்கு ஞாயித்துக்கிழமை’ அண்ணன் வேண்டுமென்றே கத்திச் சொன்னான். ஒரு ஸேடிஸம் இருப்பதாகப் பட்டது எனக்கு. கிருஷ்ணன் கோவில் தெருவில் 1970களில் வாழ்ந்த பொற்காலங்களில் சில களப்பிரர் காலங்களும் இல்லாமலில்லை.

டூ லேட்.

கடுப்புடன் 25 பைசாவை டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு , திட்டிக்கொண்டே , ஆர்ச் நோக்கி நடக்கலானேன்.

முடி வெட்டிக்கொள்வதில் சிரமமில்லை. பி.டி டீச்சரிடம் அடிவாங்க வேண்டாம். அவர் பிடரியில் கை கொடுத்து முடியைப் பிடிப்பார். முடி பிடிபட்டால், இழுத்து, கன்னத்தில் ஒரு அறை . “மூதி! எத்தனவாட்டி சொல்லியிருக்கு? முடி வெட்டினா, ஒட்ட வெட்டணும். மெசின் போட்டுத்தான் வெட்டணும். சோத்தைத் திங்கியா..இல்ல…”

மெசின் போடுவதில் “ பன்னி முடி” என்று நண்பர்களால் எள்ளப்படுவது உண்டு என்றாலும், ஆத்துப்பாலத்திலின் அடியிலிருந்து தாமிரபரணியில் பாய்ந்து குளிப்பதில் , தலை சில் எனக் குளிருவதில் ஒரு சுகம்… ப்ரச்சனை முடிவெட்டுவதிலல்ல….

ஆர்ச் வளைவில் வலப்புறம் பஸ் ஸ்டாண்டு நோக்கித் திரும்புமிடத்தில் இருக்கும் சலூனில் முடியிறக்கம். சுழலும் நாற்காலிகள் இரண்டு உண்டு. எதிரும் புதிருமாக. ஒரு கண்ணாடியிலிருந்து மறு கண்ணாடியில் எதிராளி உருவத்தைப் பார்த்துப் பிம்பங்கள் மூலமாகப் பேசமுடியும். அதுவும், அண்ணாச்சி “ ம்ம்… தலையக் குனில. அவங்கிட்ட பொறவு பேசு” என்று திட்டி, தலையைக் கீழே அழுத்துவார். அதையும் தாண்டி எங்கள் பேச்சு சைகையில் தொடரும்.

நாற்காலியில் சிறுவர்களை நேரே அமர்த்தமாட்டார் அண்ணாச்சி. ஒரு பலகையை நாற்காலியின் இரு கைகளுக்கும் குறுக்கே வைத்து, தூக்கி அதில் அமர்த்துவார். அது எங்கள் உயரத்திற்கு இழுக்கு.

“அண்ணாச்சி, பலகை வேண்டாம். அது சின்னப்பயலுவளுக்கு”

“டே! நீ பெரிய ஆளுல்லா! அண்ணாச்சிக்கு உன் உயரத்துக்குக் குனிஞ்சி வெட்ட முடியாது பாத்துக்க. வயசாயிட்டுல்லா? அதான் பலகை போடுதேன்” என்பார் அவர்.

அடுத்ததாக காத்திருக்கும் ஒரு பெரியவர் “ லே! குஞ்சப் பிடிச்சு மோளத்தெரியாத பய நீயி! உனக்கு பலகைக்கு மேல ஒரு பலகைல்லா போடணும்?” என்று காயப்படுத்துகையில் அண்ணாச்சியின் பதவிசான வார்த்தைகள் தேனாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகம்,. அனைத்துப் பள்ளிகளும் திங்கட்கிழமை காலையில் பிடரியில் விரலிட்டு, பிரம்பால் கால் முட்டுக்குக் கீழ் உரித்தெடுக்கும் என்பதால்   சிறுவர்கள் கூட்டம் மிக அதிகம். காலை ஆறுமணிக்கே சென்று நின்றாலும், எவனாவது,  தன் அண்ணன்,அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் நிற்பான்.

கடையின் ஒரு மூலையில் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும் இரு பலகைகளை அண்ணாச்சி எடுத்துக் காட்டுவார். ஒன்றில் சிவப்புக்கோடு, மற்றதில் நீலக்கோடு. அவையும் காலவெள்ளத்தில் அரிக்கப்பட்டு, வெளிர் நிறத்தில் அங்கங்கே சாயம் நீங்கி, கோடு விட்டு விட்டுக் காணப்படும்.

“அண்ணாச்சி பலகை வேண்டாம்”

“எந்தக் கலரு வேணும் சொல்லு.” அண்ணாச்சி கிசுகிசுப்பாக, ஒரு ரகசியமாகக் கேட்பார்.

“நல்ல பிள்ளைக்கு நீலம் ; சேட்டைப் பிள்ளைக்கு சிகப்பு”  அண்ணாச்சி ஒரு க்ளூவுடன் பலகைகளை நீட்டுவார்.

“சீக்கிரம் சொல்லுடே. அந்தா , அந்தப் பய வாரான் பாரு. அவன் வந்து நீலம் கேட்டா அண்ணாச்சி கொடுத்துருவேன்”

“நீலம்” எனப் பதட்டமாக டக்கென சொல்லி, வாயை மூடுவேன்.

“அவன் நல்ல பயல்லா? அதான் நீலம் எடுக்கான்” அண்ணாச்சி ஒரே தூக்காகத் தூக்கி பலகையில் வைத்து, தண்ணீரால் முடியை நனைப்பார். காத்திருக்கும் பிற ஆண்கள் குலுங்கிச் சிரிப்பார்கள்.

“எத்தனை வருசமா, எத்தன சின்னப் பயலுவள இப்படி ஏமாத்தித்திட்டுத் திரியுதீய? நானே இந்த நீலப் பலகை கேட்டு ஒக்காந்திருக்கேன். என்னண்ணாச்சி?” என்பார் ஒரு வாலிபர். அண்ணாச்சி பதிலே பேசமாட்டார்.

அடுத்த பயல் வந்து “ அண்ணாச்சி பலகை …”

“வேண்டாம்” எனச் சொல்லுமுன், அவனுக்கு சிகப்பு பலகையைக் காட்டுவார். உயரத்தில் அமர்ந்திருக்கும் நான், அவனை எக்கலாகப் பார்த்து “ சேட்டைப் பயலுக்கு -சிவப்பு. அதாம்ல உனக்கு” என்பேன்.

அவன் மூக்கு புடைத்து அழத் தொடங்குமுன் அண்ணாச்சி அவனை அவசரமாக வெளியே கொண்டு செல்வார்.

“ஏல, அழாத. அவன் மக்குளிப்பய. நொள்ளைப் பயலுக்கு நீலம்; சமத்துப் பிள்ளைக்கு சேப்பு” இது தெரியாம அவன் உளறுதான். நீ சமத்துப் பிள்ளல்லா? அதான் உனக்கு சேப்புக்கலர் பலகை எடுத்து வச்சிருக்கேன். அவங்கிட்ட சொல்லாத, என்ன?” என்பார்.

இந்த சீண்டுதல் உரையாடல்தான் கண்ணாடிகளில் பிம்பம் பார்த்து நடக்கும். “ நொள்ளைப் பயலுக்கு நீலம்” என்று அவன் சொல்ல “ சவலைப் பயலுக்கு செகப்பு”என்று நான் சொல்ல, “ லே அடங்கி இருங்கடே. கத்தி வச்சிருக்கன். காத நறுக்கிறும் பாத்துக்க. பொறவு, வீட்டுல போயி தேடினா கிடைக்காது” என்றவாறே, சுவரில் மாட்டியிருக்கும் தோல் பெல்ட்டில் கத்தியைப் பட்டை தீட்டுவார் அண்ணாச்சி. இரு பயலுகளும் யார் நல்லபிள்ளை, நொள்ளை, சேட்டை, சமத்து” என்று விவாதித்துக் கொண்டே ஆர்ச்சைக் கடந்து செல்வோம். அண்ணாச்சி கடையில் பலகை வேண்டாம் என்பது, எந்தப் பலகை வேண்டுமென்பதாக உருமாறும்.


அக்டோபர் 2001, அகமதாபாத்:

“சுதாகர். மேக் யுவர் சாய்ஸ். இன்னும் ராஜீவ் மல்கோத்ரா, புவன் படேல் இருவருக்கும்  நீ இன்னும் ஏரியா பிரித்துக் கொடுக்கவில்லை. அவர்கள் கேட்கும் மேலை நாடுகள் போஸ்ட்டிங் கிடைக்காது. பங்களாதேஷ், ஸ்ரீலங்க்கா மட்டும்தான் உண்டு. இருவரும் இரண்டும் வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் வேலையை ராஜினாமா செய்தால், நீ பொறுப்பு. என்ன செய்யப் போகிறாய்?”

ஜெனரெல் மேனேஜர் அரிஹந்த் தல்வி கேட்டதில் மவுனமாக இருந்தேன். இருவரும் நல்ல விற்பனையாளர்கள். மாலை ஆறுமணிக்கு புவன் படேலை கான்பரன்ஸ் அறையில் அழைத்தேன். என்னுடன் மனத வளத்துறைத் தலைவர் மனீஷ் ஷர்மா, துணைத்தலைவர் ஷில்பா த்ரிவேதி…

“புவன்” என்றேன் “ காலையிலிருந்து  உனக்காக வாதாடியிருக்கிறேன். வளரும் நாடு ஒன்றை, உனக்கு விருப்பமான ஒன்றை நீ தேர்ந்தெடுக்கலாம். பங்களாதேஷ் அல்லது ஸ்ரீலங்க்கா”

அவன் கோபத்தில் சிவந்து ஏதோ சொல்ல வாயெடுக்க “ சவாலை ஏற்பவனுக்கு டாக்கா, சோம்பேறியாக அப்படியே வாழ்க்கையைக் கழிக்க கொழும்பு “ என்றேன். ஷில்பா , சொன்னதற்கு அதிகமாகச் சிரித்து வைத்தாள். காரியம் கெட்டுவிடுமோ?

“இதோ பார். பங்களாதேஷ் இந்தியாவின் வளர்ச்சியில் 10 வருடம்தான் பின் தங்கி இருக்கிறது. டெக்ஸ்டைல் ஏற்றுமதி, நம்மை மிஞ்சி விட்டார்கள். நமது டெக்ஸ்டைல் மென்பொருள் அங்கே விற்பது கடினம். ஆனால் மார்க்கெட்டைப் பிடித்துக்காட்டினால், அடுத்த போஸ்ட்டிங்…” என்றபடி மனீஷ் ஷர்மாவைப் பார்த்தேன்

“யு. எஸ். ஏ” என்றார் . புவன் படேலின் மாமா, சித்தப்பா என முழுக்குடும்பமும் ந்யூ ஜெர்ஸியில் கடை வைத்திருக்கிறார்கள். அவன் அங்கு சென்று கடை வைக்கத் திட்டம். இது அவன் நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்.

“ஸ்ரீலங்க்கவும் இருக்கிறது. சுகமான மார்க்கெட். நன்றாகச் செல்கிறது நமக்கு. அங்கேயே சென்று செட்டில் ஆகவேண்டும், இல்லை , மலேஷியா போஸ்ட்டிங்க் வேண்டுமென்றால் கொழும்பு நல்ல இடம். இல்ல, ஷில்பா?”

“அப்ஸொல்யூட்லி” என்றாள் அவள்.

புவன் இரு நிம்டங்கள் பேசாதிருந்தான். பின் ஷில்பாவிடமிருந்த காகிதத்தை வாங்கி, பேனாவைத் தேடினான்.

பத்து நிமிடத்தில் வெளியே வந்து ராஜீவை அழைத்தேன். இருவரும் காண்ட்டீனில் சென்று ஒரு மூலையில் அமர்ந்தோம். “ ராஜீவ்” என்றேன் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்தவாறு “ பெரும்பாடுபட்டு ஸ்ரீலங்க்காவை உனக்காக வைத்திருக்கிறேன்”

அவன் முகம் சுருங்கி “நோ ஸர்” என்னும்போது இடை மறித்தேன் “ உன் குழந்தைக்கு ஒன்றரை வயசாகிறது. இன்னும் மூன்று வருடம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவேண்டிய நேரம். இது மீண்டும் கிடைக்காது. ஸ்ரீலங்க்கா சுகமான மார்க்கெட். அதிகம் டென்ஷனில்லை. நீ கில்லாடி. எப்படியும் முன்னேற்றுவாய். அதன்பின் மலேஷியா, சிங்க்கப்பூர் ஏன், ஆஸ்த்திரேலியாவும் முயல முடியும். புவனுக்கு பங்களாதேஷ் கொடுத்திருக்கிறேன். அவனும் உன் போல் சாய்ஸ் கேட்பான். ஸ்ரீலங்க்கா அவன் எடுக்க சாத்தியம் இருக்கிறது”

மனீஷ் வெளியே சென்று, பி.ஸி.ஓவில் இருந்து மனைவியை அழைத்துப் பேசினான். “ ஸ்ரீலங்க்கா பரவாயில்ல சார்” என்றப்டி, ஷில்பாவிடம் இருந்த பேப்பரில் கையெழுத்துப் போட்டுச் சென்றான்.

இரவு எட்டுமணிக்கு சாப்பிட அமர்ந்தோம்.  “வெரிகுட்” என்றால் அரிஹந்த் தல்வி “ இருவரையும் முனைப்புடன் சந்தோஷத்துடன் அவரவர் தொகுதிக்குச் செல்ல வைத்திருக்கிறாய். என்ன செய்தாய் அப்படி?”

எதிரே அரிஹந்த்துடன் அமர்ந்திருந்த மனீஷ் ஷர்மாவைப் பார்த்து “ சார் போன மாசம் பணியாளர்களை  உந்தமூட்டுவது எப்படி? என்ற பயிற்சி முகாம் எடுத்தார். அதன் பயன் இது. நன்றி மனீஷ் ஜி” என்க, அவர் முகமெல்லாம் பிரகாசமாகி , ‘நன்றி ஜி. “ என்றார் . சாப்பிட்டு வெளிவரும்போது அவர் தனியாக அழைத்து” அரிஹந்திடம் உன்னைப்பற்றி நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

விடுதியில் அறை நோக்கி நானும் அவரும் தாழ்வரையில் நடக்கையில் முணுமுணுத்தேன்.

“நல்ல பயலுக்கு நீலம். சேட்டை பயலுக்கு செகப்பு”

“வாட்?”

“ஒன்றுமில்லை”

1 thought on “நல்ல பிள்ளைக்கு நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *