நாகலெட்சுமி மெஸ் என்ற உணவு விடுதி, ஒரு பெட்ரூம், ஹால் கிட்சன் என்ற வீட்டமைப்பில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. குடியிருப்பு வளாகத்தினுள் வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், எடுப்புச் சாப்பாடு என்ற அளவில் நடந்து வருகிறது.

நாகலட்சுமி ,மெஸ் வைக்குமுன் வங்கி ஒன்றில் ஆஃபீஸராக வேலை பார்த்தார் எனவும், பிடிக்காது போகவே, ஊரில் ப்ரைவேட் ட்யூஷன் தொடங்கி, அதன்பின் மெஸ் நடத்தத் தொடங்கினார் என்பதும் கொசுறு செய்திகள்.

வளாகத்தில் இருக்கும் நாலு தமிழ்க்காரர்களில் பாலமுருகன் குடும்பம் சற்று அதிகம் பழக்கம். சித்ரா அண்ணி சுறுசுறுப்பாகக் குழந்தைகளைக் கிளப்பி பாலாவின் ஸ்கூட்டரில் முன்னே நிறுத்த, அவர் பள்ளியில் கொண்டுவிட்டு வந்து, வீட்டில் நுழையாமலே காத்திருந்து, சித்ராவை ரயில்வே ஸ்டீஷன் அருகே விட்டுவிட்டு ஆபீஸ் செல்வார். அதே சுறுசுறுப்பு மாலையில் பிள்ளைகளை நாகலட்சுமி டீச்சரின் ட்யூஷனிலிருந்து அழைத்து வரும்போது இருக்கும். மதியம் குழந்தைகள் நாகலட்சுமியின் வீட்டிலியே பாடம்படித்து உறங்கிவிடும்.

கச்சிதமாக பதினைந்து ஆண்டுகள் இப்படிச் செல்ல, பாலாவின் மூத்தபெண் அனு எம்.பி.ஏ படித்து தில்லியில் வேலைக்குப் போனாள். சின்னவன் மகேஷ் சூரத்கல் ஆர். ஈ.ஸியில் பொறியியல் நாலாவது வருடம். சமீபத்தில் அனுவுக்குத் திருமணம் நடக்க, நானும் குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

இரு வாரங்கள் முன்பு பால முருகன் கதவைத் தட்டினார். ” நாலு நாள் டில்லி போறோம். வீட்டுல செடிக்குத் தண்ணி விட்டுறுங்க” என்றவாறே சாவிக்கொத்தைக் கொடுத்தார். முகம் படு சீரியஸாக இருந்தது. “பொண்ணைப் பாக்கவா?” என்றேன். “ஆமா” என்று தலையாட்டி நகர்ந்தார்.

மதியம் மனைவி ” கேட்டிங்களா? அனுவைக் கூட்டிட்டு வர்றதுக்குப் போறாங்க. சித்ராண்ணி சொன்னாங்க”

நல்ல சேதியாக இருக்குமோ? என்று கேட்க நினைத்து, பாலாவின் இறுகிய முகம் மனதில் வர, அதனைத் தவிர்த்தேன். சித்ரா அண்ணிக்கு மிக நல்ல தோழி என இல்லாவிட்டாலும், என் மனைவியிடம் அவர் பல செய்திகளை அன்னியோன்னியமாகப் பகிர்ந்து கொள்வார்.

இரு நாட்களின் பின் என் மனைவி , சித்ரா அண்ணி வீட்டில் வெகுநேரம் பேசிவிட்டு வந்தாள். “என்ன ஆச்சு?”

“அனு, மாப்பிள்ளைகூட சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்றா. பிடிக்கலையாம்”

“பிடிக்கலையா? இதென்ன சூரிதார் வாங்கற மாதிரி நினைச்சாளா?”

“பெருசாக் கத்துது. ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா. சித்ரா அண்ணி பாவம் அழுதுட்டாங்க. அவங்ககிட்ட கூட என்ன விசயம்னு சொல்ல மாட்டேங்கறாளாம்”

யோசித்தேன் . ‘நாகலட்சுமியம்மா கிட்ட பேசச் சொன்னா என்ன?”

“அது அவங்ககிட்ட பேசும்கறீங்க? அம்மாகிட்டயே சொல்ல மாட்டேங்குது.”

” அவங்க கேக்கற விதத்துல கேப்பாங்க. எதுக்கும் சொல்லிப் பாரு”

நற்றாய் அறியாத சில நுணுக்கங்களைச் செவிலித்தாய் அறிவாள். வளர்த்தவளுக்குக் குழந்தையின் ஒவ்வொரு நாடி நரம்பும் தெரியும். இது பண்டைத்தமிழ் மரபு. இப்ப எப்படி? தெரியவில்லை.

அனு வீட்டில் இருக்க, இருபெண்களும், நாகலெட்சுமியிடம் பேசச் சென்றனர். “கடையடைச்சிட்டு மூணு மணிக்கு வர்றேன்” என்றாராம் அவர். முக்கியமான பேச்சு என்று சொன்னபிறகும், கடையடைப்பது முக்கியம் எங்கிறாரே என்று என் மனைவிக்கு நெருடியது. இவர் என்ன கவனமாகக் கேட்கப்போகிறார்?

அனுவிடம் பேசுமுன் அவர், அவளது நெற்றியைத் தொட்டார் ” என்னம்மா ஆச்சு?” அனுவின் முகத்தில் ஒரு விசும்பல் சற்றே தோன்றி , மறு நொடி அவர் கையை உதறி விலக்கினாள். பதில் சொல்லாமல் , உடல் இறுகி வேறு திசை வெறித்தாள்.

‘அனு. ஆண்ட்டி வந்திருக்காங்க! என்ன இப்படி மரியாதையில்லாம?” சித்ரா குரலெழுப்ப, நாகலட்சுமி தடுத்தார்.

“எப்படி இருக்க அனு?”

பதிலில்லை. அவள் தோள்களைப் பற்றித் திருப்ப வந்த சித்ராவை அவர் ‘ தொடவேண்டாம்” என்று சைகையால் தடுத்தார்.

மெல்ல மெல்ல பழைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசி விடைபெற்றுச் சென்றார் நாகலட்சுமி. அடுத்த நாள் தன் மகளைக் கடையைப் பார்த்துக்கொள்ள வைத்துவிட்டு ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு அனுவைக் காண வந்தார்.

“இந்தா அனு, உனக்குப் பிடிச்ச உருளைக்கிழங்கு பொடிமாஸ், ஜோவார் ரொட்டி” , டப்பாவை நீட்டினார்.

“தாங்க்யூ அம்மா” அனுவின் குரல் சற்றே உற்சாகமாயிருந்தது.

“இன்னிக்கு சாயங்காலம் மலாட் மார்க்கெட் போவமா? எனக்கும் ட்ரெஸ் எடுக்கணும்; நீ பேரம்பேசி வாங்கித்தா என்ன? உனக்குத்தான் அவன் கிட்ட அடிச்சுப்பேசி வாங்கத் தெரியும்”

அனு சிரித்தாள் “இத்தன வருஷத்துக்கு அப்புறமும், உங்களுக்குப் பேரம் பேச வரலியேம்மா?!” இருவரும் சிரித்தனர். அவர் , அவள் கையைப் பற்றியபோது அனு மெல்ல விலக்கிக் கொண்டாள்.

“அனு” என்றார் நாகலட்சுமி மெதுவாக, ” உன்னோட கிளாஸ், வீட்டுல இருந்த ப்ரச்சனை, முதல் க்ரஷ் எல்லாமே எங்கிட்ட சொல்லியிருக்க. உன் அம்மாவை விட கொஞ்சம் ஃப்ரீயாகவே எங்கிட்ட பேசலாம் நீ. இது உனக்குச் சொல்ல வேண்டியதில்ல. இருந்தாலும் சொல்லறேன். என்ன ப்ரச்சனை?”

அனு மவுனமாக இருந்தாள்.

” ஹனி மூன் போறவரை நல்லாத்தான் பேசிட்டிருந்த. என்ன ஆச்சு? ஆபீஸ்ல எதாச்சும் ப்ரச்சனையா? அல்லது…”

“கல்யாணம்தான் ” என்றாள் அனு, பெருமூச்செறிந்தவாறே. தலையை உயர்த்தி, முடியை இருகைகளாலும் வாரி, பின்னால் க்ளிப்பில் சொருகியவள் தொடர்ந்தாள்

“அவனுக்குச் சில பழக்கம் இருக்கு. கண்டபடி டேபிள்ள லாப்டாப், பேப்பர் , கர்ச்சீஃப், ஏன் உருவிப் போட்ட சாக்ஸ் வரை அது மேல சட்டுனு எறிந்திடறான். அப்புறம், ஃப்ரண்ட்ஸ் கிட்ட ரொம்ப நேரம் போன்ல கதையளக்கறான். நான் ஒருத்தி இருக்கறதக் கண்டுக்கறதே இல்ல. அதுக்கப்புறம் ” ஸாரி. இது முக்கியமான கால்’ அது இதுன்னு சொல்லறான். ஹனிமூன்ல, இதெல்லாம் மாத்தணும்னு சொல்லிவைச்சேன். சரி சரின்னு தலையாட்டினான்.

ஆனா, வந்ததுக்கு அப்புறமும் அதே மாதிரி நடந்துக்கறான். கேட்டா கோபப்படறான். ‘ என்னை நானா இருக்க விடு’ங்கறான். ‘அப்ப ஏன் ஹனிமூனுக்கு முன்னாடி சரின்னு சொன்னே?” ன்னு கேட்டா, கத்தறான்.”

“யு நோ!” என்றவள் அழுகையுனூடே திணறினாள் ” அவன் என்னைப் பயன்படுத்திட்டான். அவ்வளவுதான். ஹி ஜஸ்ட் யூஸ்ட் மி. சிம்பிள். ஹனிமூன்ல நான் வேணும். அதுனால சரின்னு சொல்லிட்டு இப்ப தன் புத்தியக் காட்டறான். ஐ கேனாட் லிவ் வித் ஹிம்’

நாகலட்சுமி அமைதியாக இருந்தார். ” இந்த மாதிரி எப்ப உனக்கு தோணிச்சு?”

“இப்ப, தில்லிக்கு வந்தப்புறம்”

“ஹனிமூன் போறப்ப , இப்படியெல்லாம் தோணல”

“இல்ல” என்றாள் அனு , கண்ணைத் துடைத்தபடி.

“கலியாணத்துக்கு முன்னாடி, வருங்காலக் கணவன், மனைவிகிட்ட இருக்கிற நல்லது மட்டும்தான் பெரிசாத் தெரியும். நாம வாங்க நினைக்கிற மொபைலோட விளம்பரம் பாத்த்தாலோ, அல்லது யார்கிட்ட இருக்கறதைப் பாத்தாலோ, அதன்மீதுதான் கவனம் போகும். வாங்கினதுக்கு அப்புறம், அந்த கவனம் போயி. அதுல இருக்கிற குறையெல்லாம் தெரிய ஆரம்பிக்கும். மண வாழ்க்கையில முதல்ல, நாம ஒருத்தரை அடையறதா நினைச்சுக்கறோம். உண்மையில , அவங்களும், அதே மாதிரிதான் நினைப்பாங்க.

இதுல ஆணுக்கு , தான் விரும்பியவளை அடையும்வரை ஒரு டென்ஷன், அதீத கவனம் இருக்கும். கிடைச்சப்புறம், ஷி இஸ் மைன். எங்கிற உணர்வு தலையெடுக்கும். அதுக்காக அவன் கவனிக்கவோ, காதலிக்கவோ இல்லைன்னு அர்த்தமில்ல. ‘திருமணத்துக்கு முன்னாடி இருந்த அந்த வேகம், தவிப்பு இனி வேண்டாம்’ என்ற நினைப்பு.

ஆனா ஒரு பெண்ணு கலியாணத்துக்கு அப்புறம் தன் கணவனின் கவனம் தன்மீது இன்னும் அதிகமாகவேண்டும் என எதிர்பார்க்கிறாள். அது தவறுமில்லை. இவன் உண்மையாக காதலிக்க இனி ஒரு தடையுமில்லை என்ற நிம்மதியும் , இனி இவன் நிஜமாகவே நம்மிடம் அன்பாக இருக்கிறானா? என்ற உள்ளூரத் தோன்றும் ஒரு தற்காப்பற்ற உணர்வும், முழுதும் தன்னிடமே அவன் இருக்கவேண்டுமென்ற கைக்கொள்ளும் உணர்வும் நியாயமானது.

ஆனா, பாரு. ரெண்டுபேருக்கும் வேறு வேறு மன நிலை. இது உடல் சார்ந்த ஒரு தவிப்பு முடிந்ததும், பெரிதாக விரிகிறது. எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்லப் பொடியாகத் தொடங்குகின்றன. இவனுக்கு என் உடலையே கொடுத்திருக்கேன். என்னை எப்படி நடத்துகிறான்? என்ற அதிர்ச்சி பெண்ணுக்கும், ‘ இவள் இந்த உடலாலே என்னை அடிமைப்படுத்த நினைக்கிறாள்” என்ற சந்தேகம் அவனுக்கும் தோன்றும். இதுதான் ஹனிமூனுக்கு அப்புறம் கசப்பு வந்ததன் காரணம். இந்த நேரத்துல கொஞ்சம் மன முதிர்வோட வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராகணும். அதான் மோகம் முப்பது நாள் ; ஆசை அறுபது நாள்’ ன்னு சொல்லுவாங்க”

” இருக்கட்டும் அம்மா. ஆனா, எனக்கு ஒரு ஏமாற்றப்பட்ட உணர்வு இருக்கு. என்னால அங்க வாழமுடியாது”

நாகலட்சுமி அவள் தோளில் தட்டினார் ” நீ படிச்ச பொண்ணு. உணர்வுக்கும், அறிதலுக்கும், யதார்த்தத்துக்கும் ஒரு வரையறை இருக்குன்னு உனக்குத் தெரியும். சரி, அவனை விட்டுட்டு வந்துடறேன்னு வைச்சுக்க. எத்தனை நாள் இங்க இருப்ப? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? உங்க பெற்றோர், தம்பியோட மன அழுத்தம் எப்படி இருக்கும்? நினைச்சுப் பாத்தியா?”

“என்னைப் பத்தி யாருக்கும் கவலையில்ல… அப்படித்தானே?”

“யார் கவலைப்படணும்? நீதான். உனக்குத் தெரியணும் – உன் எதிர்காலம் எப்படி இருக்கணும்னு. அவன் கேரக்டர் மோசம், பொய் பிரட்டு செய்யறான்னு சொன்னா, நாம யோசிக்கணும். “

“அவனுக்கு பரிஞ்சு பேசிகிட்டு வர்றீங்க. என்னைப் பத்தி கவலையில்ல உங்களுக்கு”

“நீ நினைக்கற மாதிரியே அவனும் நினைக்கலாம் இல்லையா? ‘தன் உடலெனும் ஆயுதம் கொண்டு என்னை , அவ இஷ்டத்துக்கு வளைக்க நினைக்கறா’ன்னு அவனும் நினைக்கலாம்தானே? நீ ஒரு ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாக அவனுக்குத் தெரியலாம். அதுனால, அவன் முதல்லயே எதிர்க்கறான்”

அனு மவுனமாக இருந்தாள்

“ரெண்டு பேருக்குமே ஒரு காட்சிப்பிழை இப்ப. உனக்கு அவன் ஒரு manipulator ஆகத் தெரியறமாதிரியே, அவனுக்கு நீயும் தெரியற. பரஸ்பரம் ஒரு நம்பிக்கையை மீண்டும் எடுத்துக் கொண்டு வரணும். கொஞ்ச நேரம் பேசாம வெளிய போயிறு. மெதுவாக உன் எதிர்ப்பார்ப்புகளை எடுத்துச் சொல். அதன் காரணமும், செய்யாவிட்டால் வரும் பின் விளைவுகளையும் பொதுவாகச் சொல். உனக்கு வீட்டில் அவன் உதவி, துணை வேண்டும் என்பதையும் சொல். இதேதான் அவனுக்கும் சொல்லுவேன்”

அனுவின் மொபைலில் அழைப்பு வர, அவள் மெல்ல எழுந்து சென்றாள் ” லுக் டா. ஐ அம் ஸ்டில் அப்ஸெட் வித் யூ”

பாலாவும், சித்ராவும் நாகலட்சுமியிடம் வந்தனர் ” நல்லவேளை, நீங்க்க பேசினீங்க. இதுமேலதான் தப்பு இருக்கு”

“தப்பு உங்க மேல ” என்றார் நாகலட்சுமி ” பிள்ளைகள் வளரும்போது, எந்த பாடத்துல அதுங்க ஸ்ட்ராங்க், எதுல உதவி தேவைப்படும் னு அத்தனை ப்ளான் பண்ணி, சரியான கோர்ஸ் எடுத்துப் படிக்க வைக்கிற உங்களால, அதுங்க வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகுதுங்க, எதுல அவர்கள் பலசாலி, எதுல பலவீனம்னு தெரிஞ்சு படிப்படியா பேசி, கூட நடந்து ,சரி செஞ்சிருக்கணும். அப்ப விட்டுட்டீங்க. படிப்புன்னா, வெறும் அகாடெமிக் படிப்பு மட்டும் இல்ல.

கலியாணத்துக்கு அப்புறம் இருவருமே தனது தனித்தன்மையில் சிறிது இழக்கிறார்கள். அதுல உராய்வு வரும். குழப்பமான, அச்ச உணர்வுகள் வரும். இதுக்குத்தான் புதுக்குடித்தனம் வைக்கும்போது, பெண்ணோட அம்மா அப்பா,அல்லது பையனோட அம்மா யாராச்சும் ஒரு மாசம் கூட இருந்து குடித்தனம் வைச்சுட்டு வருவாங்க. சும்மா, சமையல் பாத்திரம் அடுக்கி வைக்கறது, எப்படி சமையல் செய்யறது எப்படின்னு மட்டும் சொல்லிகொடுக்கமாட்டாங்க. சில நுண்ணுர்வுகளை, அந்தரங்கங்களைப் புரிந்துகொண்டு சரியாக எப்படிச் சமாளிக்கணும்னு சொல்லிக்கொடுக்கற முக்கிய நாட்கள் அதெல்லாம். அப்ப போகாம ‘ அவங்க ப்ரைவஸிக்கு இடைஞ்சலா இருக்கும்’ன்னு போகாம இருக்கறதோட விளைவுதான் இதெல்லாம். அவ, என்னைக்கூடத் தொட விடாம, கையைத் தட்டி விட்டப்பவே , எனக்கு உடல்தான் பிரச்சனைன்னு புரிஞ்ச்சு போச்சு. பெத்த அம்மா, உனக்குப் புரிய வேணாம்?”

சித்ரா சிலையாக நிற்க, நாகலெட்சுமி அவர் வீட்டிற்குச் சென்றார்.

என் அறையின் சன்னலிலிருந்து யதேச்சையாகப் பார்த்தேன். ஒரு பெட்டியிலிருந்து பழைய போட்டோ ஒன்றை எடுத்து சில நொடிகள் பார்த்துவிட்டு, நாகலெட்சுமி அதனை மீண்டும் பெட்டியில் வைத்தார்.

மீண்டும் நான் பார்த்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *