“என் பையன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கறான்” என்றார் நண்பர் ஒருவர் மிகுந்த வருத்தத்தோடு. அவனுக்காக எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். உயர் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த வேலையை உதறி, அழுத்தம் குறைவான ஆனால் சற்றே வருமானம் குறைவான வேலையொன்றில் சேர்ந்துகொண்டு, மகனைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தினார் அவர்.

இன்று பையன் அவரைக் கண்ணெடுத்தும் காணத் தவிர்க்கிறான். வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டான். ” நண்பர்களுடன் பேசுவதில் ஒரு பகுதி கூட வீட்டில் என்னிடம் பேசுவதில்லை. இன்னும் நாலு வருடத்தில் ஓய்வு பெற்றுவிட்டால், என்ன செய்யப்போகிறேன்? தெரியவில்லை” என்றார் அவர்.

ஆளாளுக்கு அந்தப் பையனுக்கு அறிவுரை சொல்லக் கிளம்பினார்கள். ” எம்பையனை விட்டுப் பேசச் சொல்றேன். அவன் கிட்டத்தட்ட ஒரே வயசு பாருங்க.” என்றும் ” ஒரு கவுன்ஸிலர் கிட்டக் கொண்டு போங்க” என்பது வரை கேட்டு மனிதர் பயந்து போனார். ” நான் மட்டும்தான் இப்படி இருக்கேன்னு நினைச்சேன். பாத்தா பூரா தமிழ்நாடே பின்னாடி நிற்குதே?”

“தமிழ்நாடு மட்டுமில்ல, உலகமே இப்படித்தான் திணறுகிறது” என்றேன். ” கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாம வளர்ந்தப்ப, அப்பா கிட்ட பேசறதுக்கு நமக்கு என்ன டாப்பிக் இருந்துச்சு? பொதுவான பேச்சு, வீட்டு நிலவரம், பணம், முதலீடு, வாடகை, கரண்ட் பில், வீட்டுத் தவணை… வேறென்ன?”

அவர் ஆமோதித்தார். ” வேறென்ன பேச முடியும்? மிஞ்ச்சிப்போனா அவரோட மருந்து.”

“எல்லாம் அன்னியமானது. படர்க்கை. தன்மை, முன்னிலை அற்றது. பின் எப்படி உறவு வரும்?”

அவர் சற்று யோசித்தார் ” அவரோட மருந்து?.. ம்ம்… ஸ்டில் மருந்து”

“நீங்க, அவரோட வலி என்று பேசியிருந்தால், அது அவருடையது.”

முகம் ப்ரகாசமானார். ” கரெக்ட். மாத்திரை வேணுமா?ண்னுதான் கேப்பேன். வலி சரியாயிருச்சா?ண்னு கேக்கறது அம்மா, தங்கச்சி மட்டும்தான்”

“அதான் ஒட்ட மறுக்கிறது” என்றேன். இதேதான் நீங்க உங்க்க பையன் கிட்ட பேசினதும் இருக்கும் . ” ஐ.ஐ.டிக்கு பயிற்சி வகுப்பில் சேர்த்தீர்கள். எப்படிடா கிளாஸ் இருக்கு? வீட்டுக்கு வர்றச்சே டயர்டா இருக்கா? எந்த டீச்சர் நல்லா சொல்லிக்கொடுக்கறார்? என்றா கேட்டீர்கள்?

“என்னிக்கு பரீட்சை. போன தடவை எத்தனை மார்க் கெமிஸ்ட்ரில? மேத்ஸ் என்ன புத்தகம் வாங்கச் சொல்றாங்க?” என்றுதானே உங்க கேள்வி இருந்திருக்கும்? அவனை விடுத்து, படர்க்கையான அவன் படிப்பிற்கான தேவைகள் பற்றினதான உங்கள் அக்கறைக்கு அவன் எதிர்வினை கொள்வதும், உங்கள் செயல் சூழல், கருவி குறித்தானதாக மட்டுமே இருக்கும்.

இப்ப வந்து அவன் எங்கிட்ட பேசலைன்னா, பேச எதுவுமில்லை. அவனது தேவைகள் முடிந்துவிட்டன. அதைப்பற்றி மட்டுமே பேச்சு இருந்தது. உங்கள் தேவை, உறுதி, உங்களது பலவீனம் அதைச் சரிக்கட்டத் தேவையான அவனது உதவி பற்றி ஒரு பேச்சு முன்புஇருந்ததில்லை. திடீரென ஒன்றை உருவாக்குவது அவனுக்கும் செயற்கையாகப் படும். “

“எப்படித்தான் பேச வேண்டுமெங்கிறீர்கள்?” என்றார் , இயலாமை தந்த ஒரு எரிச்சலில்.

இணைத்திருக்கும் வீடியோவை அவருக்கு வாட்ஸப்பில் அனுப்பினேன். “என்ன இது?” என்றார் புரியாமல்.

” ஸ்மார்ட்டான ஒரு குழந்தை விமானம் ஓட்டுவதில் உள்ள சிக்கல்கள், அதனைத் தடுக்கும் முறை பற்றிச் சொல்கிறது. இதனைக் கேட்பவர்கள் குழந்தையை முதலிலேயே பாராட்டி முத்தம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். ஒருவகையில் அது சரியானதும் கூட.

ஆனால், அந்த விமானி என்ன செய்கிறார்? எனப் பாருங்கள். அந்தக் குழந்தையிடம் திறந்த வகைக் கேள்விகள் கேட்கிறார் open ended questions. அந்த வகைக் கேள்விகளுக்கு பதில் ‘ஆம் /இல்லை’ என வராது. குழந்தை யோசிக்க வேண்டும். தனக்குத் தெரிந்ததைச் சொல்ல வேண்டும். ஒரு நல்ல பரிமாற்றத்திற்கு அவர் இடம் , காலம் அளிக்கிறார். குழந்தை பேசுகிறது. தான் பேசுவதைக் கேட்டு அதனை நிஜமான உற்சாகமூட்டும் வகையில் அடுத்தடுத்த கேள்விகள் வருவதை அது புரிந்து கொள்கிறது. சிறுவனான தனது அறிவை வெளிக் காட்டவே அவர் இவ்வாறு செய்கிறார் என்பது அதற்குப் புரிகிறது. அந்த உரையாடல் அதற்கு உற்சாகமூட்டுகிறது. அவர்மேல் ஒரு பற்று வருகிறது

“நீ என்னவாக ஆக விரும்புகிறாய்?” என்ற கேள்விக்கு ” கேப்டனாக” எங்கிறது . அதோடு ” உங்களைப் போல்” என்று சொல்கிறது. ஒரு குழந்தை இப்படிச் சொல்ல, எதிரே இருப்பவரை அதற்குப் பிடித்திருக்க வேண்டும். குழந்தைகள் இயல்பு அப்படி.

அவர் ” என்னை விடப் பெரிய கேப்டனாக ஆகவேண்டும்” என்றவாறே ” உன்னோடு விமானம் ஓட்டக் காத்திருப்பேன். என்னை நினைவு வைத்திருப்பாயா?” என்கிறார். அது ஆம் எங்கிறது.

இதுதான் பரிமாற்றம். ஒரேடியாகச் செல்லம் கொடுப்பவர்கள், தங்கள் புகழாரத்தில் குழந்தைகளை மூச்சுத் திணற வைக்கிறார்கள். அதற்கு தன் திறமையை முழுவதும் இயல்பாக வெளிக்காட்டச் சந்தர்ப்பம் வருவதில்லை. என்ன செய்தாலும் புகழ் கிடைக்கும் என்று அறிந்த குழந்தைக்கு ஆர்வம் மங்கும். தன் திறமைக்கு ஏற்ற, ஆடம்பரமில்லாத எதிர்வினையை, நிஜமான வாழ்த்தை, ஊக்குவிப்பைக் குழந்தைகள் விரும்புகின்றன. அவர்களை மதிக்கின்றவர்களை அவையும் மதிக்கின்றன.

பொருட்களை, அன்னிய சேவையை,செயல்களை மட்டும் பேசுவது, செடிக்குத் துளித் துளியாக அவ்வப்போது தண்ணீர் தெளிப்பது போல். உரமும், காப்பும் , வளர்ப்பில் வேறுவகையானவை. அவசியமும் கூட.

நான் தண்ணீர் விட்டேன் என்று சொல்லிப் புலம்புவதில் அர்த்தமில்லை. பூச்சி எடுக்கவும், களை பிடுங்க்கவும், உரமிடவும் தயாராக இருப்பவன் தோட்டக்காரன். மற்றவர்கள், ஜன்னல் தொட்டியில் நானும் துளசி வளர்த்தேன் என்ற ரகம்.

அவர் அமைதியாக எழுந்து போனார். ஆரோக்கியமான உரையாடல் இனி நிகழ்ந்தது என்று எனக்கு செய்தி வரலாம். வராது போகலாம். ஆனால், அவரது தரப்பில் இருந்து ஒரு முயற்சி இருக்கும் .

Leave a Reply