வானம் இருட்டிக்கொண்டு வந்தது. “தூத்தல் போடறது. சீக்கிரம் வாசல்ல உலத்தியிருக்கற துணியெல்லாம் எடுங்கோடி”  பரபரத்தாள் வேங்கிப் பாட்டி. எழ முடியாது, கண் பார்வை கொஞ்சம் மங்கல் என்பதுமட்டுமே தொண்ணூற்று நான்கு வயதில் அவளுக்கு   இருக்கும் உபாதைகள்.

“வேங்கிப்பாட்டிக்கு மூக்கும் நாக்கும் ரொம்பவே தூக்கல். பாரேன். ஒரு துளி தூத்தலுக்கு வர்ற மண் வாசனைபிடிச்சுச் சொல்றா” பவானி மாமி முணுமுணுப்பில் ஒரு வியப்பு தெரிந்தது. “ டீ, இவளே, செத்த வாசல்ல துணியெல்லாம் எடுத்துண்டு வா. நனைஞ்ச்சுடுத்துன்னா, பெரிய பாட்டி முணுமுணுத்தே கொன்னுருவா”

சிவராமன் பரபரப்பை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தான். ஒரு கிழவியின் சொல்லுக்குத்தான் எத்தனை மரியாதை?! பெண் உரிமை பேசும் கொள்ளுப்பேத்தி ரம்யா முதல் , 75 வயதைக் கடந்த பவானி மாமி வரை, “ கிழமே, சும்மா கிட” என்று சொல்லாமல், எரிச்சல் பட்டாலும், அவளது ஆணையைச் செய்துவிடுகிறார்கள். இது  தில்லியில் என் வீட்டில் சாத்தியமில்லை.

மூர்த்தி மாமா, நரைத்த மார்பு மயிர்ச்சுருள்களை சொறிந்துகொண்டே “ இந்த மரியாதை என் கிற ஒழுங்குதான், குடும்பம்கிற சக்கரம் சுத்தறதுக்கு அச்சாணி மாதிரி.  நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்கறதுன்னு ஆளாளுக்குத் தொடங்கினா, வண்டி சாய்ஞ்ச்சிரும். “ ரிடையர்ட் ஆனப்புறம் அதிகம் அவர் பேசுவதாக பவானி மாமி சொன்னாலும், சில நேரம் அவரது அறுப்புகளில் உண்மையில்லாமல் இல்லை.

“ஒரு மாசமா லீவு போட்டிருக்கே? “ மூர்த்தி நிஜாம் பாக்குப் பொட்டலம் பிரித்து, அதில் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி வைத்து வாயில் போட்டுக்கொண்டு தொடர்ந்தார்.

 “ சீதம்மாப் பாட்டி பத்தி உனக்கு யாரு சொன்னா?”

“ எங்க அப்பா சொல்லியிருக்கார். சீதம்மாப் பாட்டின்னு ஒருத்தி இருந்தா, அவ போனப்புறம் தான்…”

“இந்த சாபமெல்லாம்” முடித்தார் மூர்த்தி, பெருமூச்சு விட்டு பின் சாய்ந்தவாறே.

ஒன்றா இரண்டா?   சீதம்மாள் வழி இருந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணின் வாழ்வில் வெறுமை. இப்போது ஆண்களிலும்.

“உங்கப்பா இருந்தவரை வந்திண்டிருந்தார். எட்டு வருஷமாத்தான் அவர் வர முடியலைன்னு, பைசா மட்டும் அனுப்பிருவார்.  இன்னிக்கு, நீ.  சம்பு அண்ணா வீட்டுலேர்ந்து மணி வர்றேன்னான். லோகம் மாமி பையன் , சாவித்ரி அத்தையோட பேரன்..  ரெண்டுபேரும் நாளைக்கு காலேல பைக்ல வந்துருவாங்கள். நாளைக்கு சாயங்காலம் விரதம்  தயாரா இருக்கணும். காலேல குளிச்சவுடனே வேற துணி உடுத்திண்டிடாதே.  நனைச்சுப்போட்ட வேஷ்டி தனியா கொடியில இருக்கும். அதைத்தான் உடுத்திக்கணும்.”

மூர்த்தி எழுந்து உள்ளே போனார். யாரும் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டு சிவராமன் , வேங்கிப்பாட்டியின் கட்டில் அருகே சென்றான். உறங்குகிறாளோ?

“உம் சொல்லு” . திகைத்தான். நான் வருவதை எப்படி அறிந்தாள் இவள்?

“காலைத் தேய்த்துத் தேய்த்து நடக்கறதுலேர்ந்தே தெரிஞ்சிடுத்து. நீ தான்னு. இங்க யாருமே காலைத் தேய்ச்சு நடக்கமாட்டா. தரித்திரம்னு திட்டுவேன். உனக்கு இப்படி உங்கப்பன் சொல்லித்தரலை. சொல்லு”

“சீதம்மா பாட்டி பத்தி சொல்லுங்கோ.”

பாட்டி மெல்லத் திரும்பினாள். “ என்ன தெரியணும் அவளைப்பத்தி?”

“உங்க அக்கான்னு மட்டும்தான் தெரியும். ”

பாட்டி மெல்ல எழுந்து அமர்ந்தாள் “ உம்பேரு லட்சுமணன் தானே?”

“சிவராமன்”

“மறக்கறது. நீ லட்சுமணன் பையன் இல்லியா? உங்க தாத்தாக்கள் ரெண்டுபேர் பெயரையும் சேத்து வைக்கணும்னு உத்தரவு வாங்கிண்டான் உங்கப்பன். எங்க இருக்காய் நீ? தூரதேசம்னு சொன்னா”

“பாட்டி, அந்த சீதம்மா பாட்டி பத்தி…”

“சீதைக்கும் எனக்கும் பத்து வயசு வித்யாசம். பெரியவள் அவள். லக்ஷ்மிகரமா இருப்பள். அவளூக்கு பதினாலு வயசுல கலியாணம் ஆச்சு. களக்காடு வக்கீல் சுப்பையரோட ரெண்டாவது பையன்  திலக மூர்த்திக்கு வாக்கப்பட்டா.  அவர் மூர்த்திங்க்கற தன்பெயரை மாத்தி திலக மூர்த்தின்னு வைச்சுண்டார். அப்படி திலகர் பக்தி அவருக்கு. தேசாபிமானம். பெரும் பணக்காரக் குடும்பம். “

பாட்டி இருமினாள். ‘ கொஞ்சம் தூத்தம் கொண்டுவாடா”  சிவராமன் உள்ளே விரைந்து தண்ணீர் எடுத்து வந்தான்.  “ இந்த டம்ளர்ல விடு. ஒசத்தி வச்சுண்டு விடு. இடிச்சுறாதே. எச்சில், பத்து … ஒண்ணு தெரியாது இந்தகாலக் கொளந்தேளுக்கு” . சிவராமன் நினைத்துக்கொண்டான் , என்வீட்டு ப்ரிட்ஜைப் பாத்தா, பாட்டீ, என்ன சொல்லுவாய் நீ?

தொடர்ந்தாள் “ நம்மூர்லேர்ந்து நாகர்கோவில் போறவழியில ஒரு சின்ன கிராமத்துல பிறநாட்டுக்காரா குடியேறினா. பாஷையே வேற. குதிரையை ஓட்டிண்டு போவாங்கள். அவாத்துப் பொண்களெல்லாம் வெளியவே வரமாட்டா. நம்மூர்காராளுக்கும் அவாளுக்கும் தண்ணி எடுக்கறதுல ஒரு சண்டை வந்து, சமரசம் பேசி, முடிச்சு வைச்சா. அவா நம்மூர்க்குள்ள வரக்கூடாது. நாமளும் அங்க போகப்படாது. புதுசா ஒரு கிண்று , இந்தோ… இந்தாத்துலேர்ந்து கிழக்கா போனாக்கா, வீரநாயக்கன் மண்டபம் வருமே? அதும்பக்கத்துல  புதுசாக் கிணறு தோண்டினார், வீர ராகவ முதலியார். அதான் இன்னிக்கும் மூணு தெருவுக்கும் ஜலம் தர்றது. முதலிக்கிணறுன்னு சொல்றது அதைத்தான்.

என்ன சொல்லிண்டிருந்தேன்? ஆங்… அப்ப சபேசய்யர் குடும்பம் சன்னதித்தெருவுல இருந்தது. சபேசய்யர் யாருன்னாக்க….”

“சீதைப்பாட்டி பத்திச் சொல்லுங்கோ” பொறுமையிழந்தான் சிவராமன்.

“இரேண்டா அவசரக்குடுக்கை!  சபேசைய்யர் யாருன்னு தெரியாதைக்கி, சீதை பத்திச் சொல்லச் சொல்றான். சபேசைய்யர் என்னோட அப்பா. ரெண்டு வீடு இருந்தது அவருக்கு. ஒண்ணு கீழச் சித்திரை வீதியில, இன்னொண்ணு சன்னதித்தெருவுல. கீழச்சித்திரை வீதி வீட்டுலதான் நாங்க இருந்தோம்.”

பாட்டி ஒரு கணம் நிறுத்தினாள் . “புரட்டாசி வெள்ளி. என்ன விசேஷம்னு மறந்துபோச்சு.  வாசல் பெருக்கிக் கோலம் போட்டிண்டிருந்தா சீதை. கருக்கல் நேரம். நான் ஒரு விளக்கைப் பிடிச்சிண்டு அவ பக்கமா நின்னிண்டிருந்தேன்.  சீதை என்னமோ பாடிண்டு கோலம் போட்டிண்டிருந்தாள்.

குதிரை வர்ற சத்தம் கேட்டது. என்னதுன்னு நான் பாக்கறதுக்குள்ள , குதிரை மேலேர்ந்து ஒருத்தன் டகார்னு இறங்கினான். முகமெல்லாம் மூடிண்டு, ஒரு கையில பெரிய கத்தி வைச்சிண்டிருந்தான். சீதையை அப்படியே தூக்கிண்டு குதிரை மேல வைச்சு… போயே போயிட்டான்.

அவ கத்தறா, எனக்கு என்ன நடந்ததுன்னே புரியலை. ஸ்தம்பிச்சு நிக்கறேன். சத்தம் கேட்டு பக்கத்தாதுல ஓடி வந்தா.  குதிரை பின்னாடி ஓடறார் அடுத்தாத்து சந்துரு அண்ணா.  ஆத்துல அம்மா மயங்கிவிழறா. அப்பா , பெரிய மாமா , கீழாத்துக் கிச்சா எல்லாரும் எங்கயோ ஓடறா. எனக்கு ஒண்ணுமே புரியலை.

கொஞ்ச நேரத்துல போலீஸ் டாணாலேர்ந்து ஒருத்தர் வந்து “ கோந்தே, பயப்படாம சொல்லு. அந்தாள் எப்படி இருந்தான்?:ன்னு கேக்கறார். முகமூடி, வெள்ளைக்குதிரை, கையில பெரிய கத்தி இதைத்தான் சொல்லறேன். “

மத்தியானமா ஒரு பெரிய கூட்டம். மத்தியஸ்தம் பண்றா. அந்த ஊரைச்சேர்ந்த பெரியவர் ஒருத்தர் கை கூப்பி நிக்கறார். சாயங்காலம், சீதை ஒரு குதிரை வண்டியில வர்றா. வண்டிக்கு முன்னாடி ரெண்டு குதிரைல ஆரோகணிச்சுண்டு ரெண்டு பேர். பின்னாடி பத்துபேர், ஈட்டி அது இதுன்னு…

‘பொண்ணுக்கு ஒரு பங்கம் வரலை, சாமி. அவனைப் பிடிச்சு நாங்களே சாட்டையால ரத்த விளாறா அடிச்சிட்டோம். ஒண்ணும் ஆகலை” ன்னு வண்டிக்குமுன்னால வந்த குதிரையில இருந்து இறங்கினவர் சொல்லறார். அம்மா வயித்துல அடிச்சிண்டு அழறா.

பாட்டியின் கண்கள் வாசலை வெறித்தன. அந்த காலத்துக்குச் சென்றுவிட்டாள்.

“களக்காடு கோபாலைய்யர் மகன், கட்டிக்கறேன்னு சொல்றார் “ என்றார் சபேசையர்.

“நன்னாச் சொல்றா போ..  நாளைக்கு அவா குடும்பத்துல பெரியவா எல்லாம், அவளுக்கு ஒண்ணுமாகலைன்னு எப்படி நம்பறது?”ண்னு கேட்டா என்ன சொல்லுவை நீ?” – இது அவரது மாமா விஸ்வநாதய்யர்.

 ”கலியாணம் தக்கலைல வைச்சுக்கலாம். அங்க யாரும் ஒண்ணும் சொல்லமுடியாது.  திருவிதாங்கூர் சமஸ்தானத்துல சொல்லி, அங்க குடித்தனம் அமர்த்திடலாம். உமக்கு வாக்குக் கொடுத்துட்டேன். மீறமாட்டேன். என் பையன் அங்க லா ப்ராக்டீஸ் பண்ணிப்பான்” என்றார் , அடுத்த நாள் வந்த கோபாலைய்யர்.

ஊர் வாய் மென்றது. வதந்தி பரவ, இரையெடுத்த பாம்பு பக்கவாட்டில் புடைப்பதாக, மக்கள் வீட்டு வாசல்களில் நின்று பேசினர். “சாஸ்த்ரம் என்ன சொல்றதுன்னா…” என்று அவரவர் கற்பனையில் தோன்றியதைச் சொன்னார்கள்.

 ‘ஓய், ஒம்ம பொண்ணு பிறத்தியானோட ஓடிப்போயிடுத்து. அதை வேற இடத்துல வாழ வைச்சாலும், ஊர் இப்படித்தான் சொல்லும். அவ ஆத்துலயே இருக்கட்டும். இப்ப கல்யாணி இல்லையா? பால்ய விதவைகளெல்லாம் எப்படி இருக்காளோ, அப்படி இருக்கட்டும்”

“இப்படி ஒரு பொண்ணை ஆத்துல எப்படி வைச்சுக்கறது?”ன்னா சிலர். மாக்குளம் சேர்வை, தளச்சேரி முதலியார் எல்லாரும் “ இதெல்லாம் கொடுமை. அவளை திருவிதாங்கூர் சமஸ்தானத்துல அனுப்புங்க சாமி” என்று சொன்னதை  நீலகண்ட சாஸ்த்ரி ஒத்துக்கொள்ளவில்லை.

“பர்த்தா இல்லாத ஸ்த்ரீ, ஸ்தூல உடல் இங்க வ்ரதம் இருந்து , நீக்கறதுதான் முறை. ஆனா, அயலான் தொட்ட உடல். நம்மூர்ல இருக்கக் கூடாது”  

“யாருய்யா சொன்னா இப்படி? எந்த சாஸ்த்ரத்துல இருக்கு? அது சின்ன குழந்தை ஓய்!”

“ முதலியார்! நீர் இதுல தலையிடாதேயும்.”

சீதை மண்ணில் புரண்டு அழுதாள் ‘ நான் என்ன தப்பு பண்ணினேன்? எவனோ என்னைத் தொட்டுத்தூக்கிட்டான்னா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அம்மா நீ சொல்லும்மா அப்பாகிட்ட”

கண்ணீருடன் சபேசய்யர் மகளைப் பார்த்தார். கை கூப்பினார்  “ நான் ஆண், அப்பா என்பதெல்லாம் இப்ப செத்தாச்சு சீதே. நீ எனது ஒரே மகளாய் இருந்திருந்தா, நான் வீட்டோட உன்னைக் கூட்டிண்டு , எதோ ஒரு தேசத்துல போய்ப் பொழைச்சிருப்பேன்.  உனக்கப்புறம் ரெண்டு பேர் இருக்காடி.. இந்த ஜானகிக்கும், வேங்கிக்கும் எப்படி கலியாணம் ஆகும்? மூணு வாழாவெட்டிப் பொண்களோட வாழ்க்கை எனக்கப்புறம் என்னவாகும்? இதுக்கு ஒரு பதில் சொல்லிட்டு அப்புறம் என்னைக் கேள்வி கேளு”

சீதை வாசப்படியிலேயே அன்று இரவெல்லாம் அமர்ந்திருந்தாள். அம்மா மடியில் தலைவைத்து வாசலில் உறங்கினாள். அடுத்த நாள் விடிகாலயில் அப்பா, அம்மா மட்டும் அழைத்துச்செல்ல வீட்டின் பின்புறம் ஒரு அறையில் புகுந்தாள்.

வேங்கிப்பாட்டியின் கண்கள் பளபளத்தன. “ எனக்குக் கலியாணம் ஆச்சு. ஜானகி, ஒரு விஷக்காச்சலில் திடீரென இறந்து போனாள். கலியாணம், பத்துநாள் காரியம் – ஒண்ணுத்துக்குமே சீதை வரலை. கலியாண பட்சணம் அவளுக்குக் கொண்டு கொடுப்பா.”

“என்ன கொடுமை?” சிவராமன் விதிர்த்தான்.

“இதென்ன கொடுமைங்கறே? பால்யவிதவை எல்லாம் ஆத்துல இருக்கலாம். ஆனா இவள் அந்த ரகமும் இல்லையேன்னு பெரிய பேச்சு வந்தது.. அவளுக்கு ஒரு அடையாளம் கொடுத்தா. எந்த நாள்ல அவளைத் தூக்கிண்டு போனார்களோ, அது அவள்  போன திதியாச்சு.

ஒரு வாழைமரத்தை வெட்டி, அவள் போனதாக ஐதீகம் செஞ்சுண்டு அவளுக்குக் காரியம் பண்ணினா.  இங்க, பின்னாடி ஒரு தொட்டி இருக்கு பாரு. அதுக்கு அந்தப்புறமா ஒரு சின்ன ரூம்  இருந்தது. அந்தச் சின்ன அறையில்  மட்டும்தான் அவளோட வாழ்க்கை. ஒரு திரை மட்டும் இருக்கும். யார் கண்ணுலயும் அவள் படப்படாது.  அவளுக்குன்னு ஒரு தட்டு, டம்ளர். வருஷா வருஷம் ரெண்டு புடவை. அவள் உயிரோட இருந்தும் இல்லாத நிலை.”

சிவராமன் வியர்த்தான்.

பாட்டி தொடர்ந்தாள். “ சில நாள் அவள் பாடறது மெல்லிசா கேக்கும். அம்மா கண்ணீர் வழிய மோட்டு வளையப் பாத்து உக்காந்திருப்பள். நான் அங்க போலாம்னு எழுந்தா, என் கையைப் பிடிச்சுப்பள் அம்மா. “ கொடுமைங்கறது பிள்ளை பெறப் படற அவஸ்தையில்லைடி. இப்படி பிறந்தும் பிறக்காம இருக்கே? நமக்கெல்லாம் என்ன ஜென்மமோ”ண்னுவள் அம்மா.

ரெண்டாவது பிரசவத்துக்கு அம்மாவாத்துக்கு வந்திருந்தேன் ஒரு நாள் அம்மா அவளுக்குப் பிடிச்ச கத்திரிக்காய் கறியும், வெந்தயக்குழம்பும் சாதமும் கொடுத்துட்டு சித்த பேசிண்டிருந்தா. எங்க மாமியார் அப்ப பாத்து வந்துட்டா.

“அவள்தான் போயாச்சுன்னு ஆயிடுத்தே? என்னமா அப்படி அவளைக் கொஞ்சுவை?ந்னு அம்மாவைத் திட்டினா. பொறுக்க முடியாம நான் பதிலுக்குப் பேசிட்டேன். “ உங்கம்மாகிட்ட அந்த அவுசாரி வேணுமா, உன் புக்ககம் வேணுமான்னு கேட்டுச்சொல்லு”ன்னுட்டு  மாமியார் போயிட்டா.

அடுத்த நாள் முதலிக்கிணறுல சீதை மிதந்தாள். தலையாரி, மாக்குளம் சேர்வைக்கு மட்டும் விஷயம் சொல்லி, யாருக்கும் தெரியறதுக்கு முன்னாடியே கொண்டு போயாச்சு. பெரியப்பா தகனம் பண்ணினார்”

பாட்டி சேலையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“போறும்டா… ஊருக்குப் பயந்து, மிச்ச ரெண்டு பொண்கள் கலியாணத்துக்காக, ஒரு பொண்ணை அணு அணுவா , சித்திரவதை பண்ணி, தினமும் கொன்னு… என் அம்மாவும் அப்பாவும் அனுபவிச்ச வலி இருக்கே..

இன்னிக்கு அவனவன் வீட்டுல ப்ரச்சனைன்னா, முந்தி செஞ்ச பாவமோ, சாபமோன்னு பயப்படறான்கள். அவள் ஏன் சபிக்கப் போறா? அவனவன் செஞ்ச பாவ கர்மா , அவனவன் அனுபவிக்கறான். கண் முன்னாடி இருக்கச்சே, பாவம் செய்ய தைர்யம் இருக்கு. கண்ணுக்குத் தெரியாம  இருக்கறச்சே பயப்படறான்.  கேவல ஜென்மம் மனுஷ்யம்.

இன்னிக்கு எல்லாரும் மடியா ஆச்சாரமா அவளுக்கு திதி பண்றேளே, அது என்ன வகையில புண்ணியம்?  ஒருத்தியை சித்ரவதை பண்ணினதுக்கு என்ன கர்ம தீர்வு உண்டோ அதைப் பண்ணனும்டா.”

அருகே மூச்சு செறுமிய சத்தத்தில் துணுக்குற்று திரும்பினான் சிவராமன். மூர்த்தி மாமா , கண்களைத் துடைத்து நின்றிருந்தார்.

“இரு முறை இறந்தவள்” என்றார் அவர்.

வேங்கிப்பாட்டி நிமிர்ந்தாள் “ இரு முறை மட்டும்தானா?” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *