“கம்ப ராமாயண வாசிப்புக் குழு, திருமறை வாசிப்புக் குழு, திருக்குறள் போற்றுதும் என்பதிலெல்லாம் என்ன பயன்? தெரிந்ததைச் சொல்லிக்கொண்டே இருப்பது ஒரு dementia இல்லையா?” என்றார் என் நண்பர்.

சமீபத்தில் கம்ப ராமாயணக்குழு ஒன்றில் இருப்பதைத் தெரிந்துகொண்டதன்பின் அவரது பேச்சு இது.

” என்ன பயன் வேண்டுமென நினைக்கிறீர்கள்?” என்றேன்.

“ஒண்ணுமில்லைன்னாலும், எதாவது வாழ்க்கைக்குப் பயன்படணும். திருக்குறள் எல்லாம் நேரடியா பயன்படுத்திவிட முடியாது. கம்ப ராமாயணம் பாத்திரப்படைப்பைப் பார்த்து நாம வாழ்ந்துவிட முடியாது. Too much theory . Not practical”

‘2009ல நம்ம ஆஃபீஸ்ல மனித வளத்துறை ஒரு பயிற்சி கொடுத்தாங்களே, நினைவிருக்கா?”

‘எது?” என நினைவில் தேடி ” ஆங்! அந்த இத்தாலியன் பெண்மணி… திடீரென ஒரு அதிர்ச்சியான செய்தி வந்தா என்ன செய்யணும்? நு சொன்னாளே? அதுவா? We both liked it very much இல்லையா?” என்றார்.

“அதேதான். வேலை போயிறுச்சுன்னு திடீர்னு சொன்னா, பொதுவாக என்ன எதிர்நிகழ்வு நம்மிடமிருந்து இருக்கும்?”

” நல்லா நினைவிருக்கு!

1.முதலில் அதிர்ச்சி.

2.அதன்பின் தருக்க ரீதியாக அமைதிப்படுத்திக்கொண்டு சில கேள்விகளோடு எதிர்கொள்வோம்.

3.அதன் பின் உணர்ச்சி பொங்கும் ஆத்திரம்,, அழுகை என வெடிக்கும்.

4.அதன்பின் சுய் இரக்கம், விரக்தி , தற்கொலை உணர்வு

5.அதன்பின் எதிர்மறையான செயல் அல்லது செயலின்மை. வேலை தேடாமல் சும்மா இருத்தல், சமூகத்தில் இருந்து அகலுதல்.

6. உடல் வருத்துதல். குடி போதைப்பொருள், ஆழமான நம்பிக்கை கொண்ட குழுக்களில் ஆராயமல் சேர்தல்”

“கரெக்ட்” என்றேன் வியந்து. ” அத்தனையும் அப்படியே நினைவில் வைத்திருக்கிறாய். அதுவும் அந்த தொடர் வரிசையில்!”

“இது உண்மையென பல முறை உணர்ந்திருக்கிறேன். நவீன உளவியல் அடிப்படையில் தனிமனித உறவு, சிந்தையை இப்போதுதான் அலசியிருக்கிறார்கள்”

“அப்படியா?” என்றேன். ” ஒரேயொரு நிகழ்ச்சி மட்டும் சொல்கிறேன்.

தசரதன் கைகேயியைக் காண வருகிறான். அவள் இரு வரங்கள் கேட்கிறாள். அதுவும் எப்படி?

” உனது வாக்கை நீ தவறமாட்டாயே? ” என்று உணர்வுபூர்வ ப்ளாக்மெயில் செய்தபின்னர். கேட்டதும் தசரதன் அதிர்கிறான். தலை சுற்றுகிறது.

//”அராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்” //

பாம்பு கடித்த யானையைப் போல் விழுகிறான்.

//உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;….மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;”//

அதன்பின் அவளிடம் லாஜிக்கலாக, தருக்க சிந்தனையுடன் பேசுகிறான். “நான் கொடுத்தாலும் பரதன் எடுத்துக்கொள்ள மாட்டான். மக்கள், தேவர்கள் ஒத்துக்கொள்ள் மாட்டார்கள். யாரை வைத்து இந்த அரசாள்வாய்? நான் ராமனுக்குக் கொடுத்தது போல், அவன் உன் மகனுக்குக் கொடுப்பான்”

” //‘வானோர் கொள்ளார்; மண்ணவர் உய்யார்; இனி, மற்று என்ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ் அரசு அள்வாய்யானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலேதானேநல்கும் உன் மகனுக்கும் தரை’ என்றான்//.

அவள் கேட்கவில்லை. ஒரு சமரசத்துக்கு வருகிறான். ‘ராஜ்யம் வைச்சுக்கோ.ராமனைக் காட்டுக்கு அனுப்பாதே’

/பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! – பெறுவாயேல்,மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும் மற’ //

அவள் அசையவில்லை. இப்போது அவனுக்கு உணர்வு பொங்குகிறது. ஏசுகின்றான் அவளை.

//இன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைச் கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? – கொடியோளே!‘

ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்; அறம் எண்ணாய்;“

ஆ!” என்பாயோ அல்லை; மனத்தால் அருள் கொன்றாய்;

நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்; இனி,

ஞாலம்பாவம் பாராது, இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்!//

உடல் உள்ளம் வருந்துகிறான் தசரதன். மயங்கிக் கீழே விழுகிறான்.

//கூறுபடுக்கும் கொலை வாளின்ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க,தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; //

சுய இரக்கத்தில், இராமனைப் பார்த்து ” உன்னைக் காட்டுக்குப் போகச்சொன்னேன் பார். உன் பட்டாபிஷேகத்துக்கு வைத்திருக்கும் நீரை எனக்கு நீர்க்கடனாகச் செலுத்திப் பின் காடு செல்” என் கிறான்.

//”இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன்”

“என்னின் முன்னம் வனம் நீ யடைதற்கெளியேன் அல்லேன்உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான்”

தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிபுகுதற் கண்ட கண்ணால் போகக் காணேன்”

கள்ளக் கைகேயிக்கே உதவிப் புகழ்கைக் கொண்டவள்ளல் தன்மை எனுயிரை மாய்க்கும் மாய்க்கும்”//

நாம பார்த்த அத்தனையும் அதே வரிசையில்.” முடித்தேன். அவர் அமைதியாக இருந்தார்.

தொடர்ந்தேன் ” மனித உளவியலை அன்றே கம்பர் படித்திருந்தார் எனச் சொல்ல வரவில்லை. இது யதார்த்த வாழ்வை ஒட்டிய கவனிப்பும், அதனை பிரதிப்படுத்தலுமான செயல். அன்றும் இதே வரிசையில்தான் மனித மனம் உணர்வுகளைக் கையாண்டது. டெக்ஸாஸில் இருந்து ஒரு வெள்ளைக்காரர் சொன்னதும் ஆகா ஓகோ என்றோம். இது ஒரு கதையில் , ஒரு பாத்திரத்தின் செய்கையாக கம்பன் பதிந்திருக்கிறான்.

என்ன பயன் என்ற கேள்விக்கு வருகிறேன். படிப்பது ஒரு செயல். அதனைப் பக்தியுடன் பார்ப்பது ஒரு கோணம். அதனை வாழ்வுடன், நாம் கற்றதுடன் பொருத்திப் பார்ப்பது மற்றொரு வாழ்வியல் உத்தி. எது வேண்டுமோ, அதனை குழுக்களில் பயன்படுத்தலாம்.

இல்ல , வாட்ஸப் க்ரூப் என்பது மிமி -க்களை பரப்பி கண்மூடித்தனமாக மோடி, அண்ணாமலையை இகழ்ந்து தவறான தகவல்களுடன் Forwarded messagesகளை அனுப்புவதற்கு மட்டுமே, அதுதான் பொழுது போக்கு என்றால் அதில் நான் இருப்பதில்லை. இருக்கிற சில காலம், ஒழுங்காகச் செலவிட வேண்டும் என நினைக்கிறேன் ”

அவர் ஒரு நிமிட அமைதிக்குப் பின் சிரித்துக்கொண்டே கேட்டார் ” என் அழைப்புகளை எடுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

” சில forward messageளின் பின்னூட்டமாக எனது எண்ணத்தை பரப்ப முயற்சிக்கிறேன். சில நேரம் பயன் இருக்கும். இருக்கலாம்”

இருக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *