பெரியசாமி சாரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை – ஆத்தூர் அருகே அவரது கிராமத்தில் 1952ல் பிறந்து வளர்ந்திருந்தால், சாலக்குடியில் ஒரு அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியில் அவருடன் பணி புரிந்திருந்தால், தற்சமயம் சிவகாசியில் அவரது வீட்டின் அருகில் வசிப்பவராக இருந்தால் ஒருவேளை தெரிந்திருக்கலாம்.

அப்படியே தெரிந்திருந்தாலும், முகத்தைச் சுருக்கி, புருவம் நெரித்து நினைவில் கொண்டு வர சிரமித்து ” அவரா?அவருக்கென்ன இப்ப?” என்பீர்கள். அந்த அளவு , பரியச்சமானாலும், தனித்து நினைவில் நிற்காத சாதாரணர்

இளைஞர்களுக்கான சிந்தனைப் பயிற்சிப் பட்டறை ஒன்றில் எனது ஒரு மணி நேர நிகழ்வில் அவருடன் அறிமுகமானேன்.
” சார், இது இளைஞர்களுக்கு”
“இருக்கட்டும். நானும் இதெல்லாம் அறியாதவன் தான். எனவே இளைஞன் எனவே கருதிக்கொள்ளுங்கள்”
சிரித்தோம். என்னமோ, அவரது இயல்பான, பொய்யில்லாத மொழி சட்டெனப் பிடித்துப் போய்விட்டது எனக்கு.

அதனின் ஓரிரு முறை வாட்ஸப்பில் உரையாடியிருப்போம். அவ்வளவுதான்.
போன வாரம் எனது நண்பரின் வொர்க் ஷாப். அதிலும் இருந்தார் பெரியசாமி. குறித்த நேரத்தில் பயிற்சிக் கேள்விகளுக்கு பதிலளித்தல், நோட்டுப் புத்தகத்தில் குறிப்பு எடுத்தல் என ஒரு 1980களின் கீழ்ப்படிதலுள்ள மாணவரென இருந்தார்.

அவரைத் தொடர்பு கொள்ள முனைந்தேன். ஒரு நிமிஷம் என்றவர் ” நாளைக்கு 12 மணிக்குக் கூப்பிடட்டுமா? 12 -1 மணிக்குள்ள பேசலாம்”
ரிடயர்ட் ஆகிவிட்டார்… எனக்கு குறுகுறுத்தது ” சார் , வேலையில் இருக்கீங்களோ? லஞ்ச்ச் டயம் பாத்துக் கூப்பிடறீங்களேன்னு..”
” இல்ல. உங்களுக்கு கால அவகாசம் இருக்கணுமே? அதோட 10-12 எனக்கு ஒரு கிளாஸ் இருக்கு”
“கிளாஸ் எடுக்கறீங்களா?”
“இல்ல, படிக்கறேன். சமஸ்க்ருதம்”

ஒரு கணம் வியப்பில் அமைதியாக இருந்தேன்.

“ரெண்டாவது படியில இருக்கேன். நம்ம ராஜபாளையத்துல இருக்கிற செண்டர்லேர்ந்து போஸ்ட்ல பாடம் அனுப்புவாங்க. கிளாஸ் ஆன்லைன்ல. சேர்ந்தா படிக்கணும்ல?”

“ஸார். ஒண்ணு கேப்பேன் , தப்பா நினைக்கக்கூடாது”

“சொல்லுங்க”

“எப்படி ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு தாக்குப்பிடிச்சு நின்னு படிக்கறீங்க? பொறுமை மட்டுமல்ல, ஒரு மன உறுதி வேணும் இதுக்கெல்லாம்”

அவர் சிரித்தார் ” நீங்க என் கிளாஸ்ல இருக்கறவங்களைப் பாக்கலை. 74 வயசு, 81 வயசுல சமஸ்க்ருதம் கத்துக்க வர்றாங்க. அதுல 81 வயசு அய்யாதான் முதல்ல வந்து காத்திருப்பாரு. மைக், வீடியோ காமெரா ஆன்/ ஆஃப் பண்ணத் தெர்யாம இருந்தவர், ஒரு மாசத்துல கை தேர்ந்த ஆன்லைன் மாணவராகி விட்டார். சராசரி வயசு என் வகுப்புல 65 இருக்கும்”

ஆர்வமானேன் ” எப்படி இது சாத்தியமாகிறது. சராசரி வயது 21 இருக்கும் வகுப்பில் மாணவர்கள் தொடர்ந்து வருவதில்லையே?”

“நீங்க கம்பராமாயணம் வகுப்பு எடுக்கறீங்க இல்லையா? எத்தனை பேர் இருக்காங்க?”
” வாரம் ஒரு மணி நேரம். 34 பேர் உறுப்பினர்கள்”
“எத்தனை பேர் வர்றாங்க?”
“6 பேர் “

சிரித்தார் ” இதுலயும் சராசரி வயசு பாத்தா 45 -50 இருக்கும் இல்லையா?”
“ஆமா”
“எனவே, 22 வயசோ 45 வயசோ ஒரு தகவல் நிலை இல்லை. You are going after wrong data. என்ன காரணம் என்பதை கவனமாகக் கண்டறியுங்கள்”

“வேறென்ன காரணம் இருக்கும்? அதே நேரத்துல இன்னொரு வகுப்பு, சீரியல், வீட்டுக்கு விருந்தினர், உடம்பு சரியில்லை, மறந்துட்டேன். தெருவுல சாமி புறப்பாடு,….”

“முக்கியமாக , இந்த வகுப்பு மற்றதை விட முக்கியம் என்ற உணர்வில்லாத நிலை. இப்படிச் சொல்றேனேன்னு வருத்தப்படாதீங்க. ஒருவேளை நீங்க சொல்வது அவர்களுக்கு அந்த அளவு தரமில்லாததாக இருக்கலாம். அல்லது பிடிக்காமல் இருக்கலாம்”

“ஒத்துக்கொள்கிறேன். அப்படியிருக்குமானால் கேட்டுவிடுகிறேன். நன்றி சார்”

“கேளுங்க. அதை விட இன்னொன்னும் இருக்கு. அவர்கள் தன்னார்வத்துடன் வருகிறார்கள் இல்லையா? வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றுதான் என்ற மன நிலை இருக்கும். இலவசம் என்பதற்கு எப்பவுமே மலிவு என்ற தரக்குறைவை நாம் ஏற்றிவிடுவோம். அனைத்தையும் காசோடு மட்டுமே தொடர்பு படுத்துவோம். . ஒரு தகுதித் தடையை முன் வையுங்கள். அது ரூ 200 ஆகக்கூட இருக்கலாம்”

“ஆட்கள் அதிகம் வரவேண்டும் சார். இது தடையாக இருந்துவிடக் கூடாது. “

“அப்படி நினைத்தால், நிஜமாகவே முழு வகுப்புகளுக்கும் வருபவர்கள் மட்டும் சேருங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். என்ன எதிர்பார்க்கிறீர்கள் என நீங்கள், உங்கள் குழு சொல்லாததால் வந்த குழப்பம் இது.”

அமைதியாகக் கேட்டிருந்தேன்.

“ஒரு செயல் தொடங்கும்போது, சொல்பவர், கேட்பவர் இருவருக்கும் என்ன கடைமைகள், எதிர்பார்ப்புகள் என்பதைத் தெளிவாக வரையறுங்கள். ஆர்வம் மட்டும் ஒரு செயலை வெற்றியடைய வைக்காது. என்ன சொல்ல வருகிறோம் என்பதை நீங்கள் சொல்ல வேண்டிய கடமை மட்டுமல்ல, பங்கேற்பவர்களின் ஒழுங்கு என்று ஒன்றும் இருக்கிறது. “

தொடர்ந்தார் ” இந்த மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பார்த்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக நெருக்கியடித்து நின்று தொடங்குவார்கள். அதி உற்சாகக் கூச்சலும், விரைவான ஓட்டமுமாகத் தொடங்க்கும். நாலு கிமீ கடந்தபின் பார்த்தால், பாதிப்பேர் இடுப்பில் கைவைத்து நின்று, முகத்தை வலியில் சுருக்கி, சாலையோரமாக நிற்பார்கள். தொடர்ந்து ஓடுபவன், கத்த மாட்டான். முதல்லில் வேகமாக ஓடவும் மாட்டான். ஓட்டம் அவனது சிந்தனையில் இருக்கும், முதலில் வரும் உணர்ச்சி உந்தச் செயலில் அல்ல. இதுதான் எல்லா வகுப்புகளில் சேர்பவர்களுக்கும். பாட்டு கத்துக்கறேன் என 45 வயதில் வருவார்கள். ரெண்டு வாரம்… தொண்டை வலிக்குது, எனக்கு மமகம் சரியா வரலைன்னு திட்டிட்டார் என ஒரு காரணம் சொல்லி நிறுத்துவார்கள். சமஸ்க்ருதம் அப்படித்தான்” ஒரு நிமிடம் நிறுத்தினார்

” சாலக்குடிக்கு இட மாற்றம். மலையாளம் ஒரு வார்த்தை தெரியாது.அங்கே பாண்டி என்று கிண்டல் பண்ணினார்கள். சிரித்துக்கொண்டே 6 மாதத்தில் பேசக்கற்றுக்கொண்டேன். ஒருவருஷத்தில் எழுதவும் கற்றேன். அவர்களது கலாச்சாரம் பற்றிய ஆர்வத்தில் மேலும் கற்றேன். இதேதான் சமஸ்க்ருதத்திலும். தமிழே ஒழுங்க்காகத் தெரியாது. பொறுமை, முயற்சி. ஒழுங்கு. 60 மார்க்தான் எடுத்தேன். நான் என்ன பண்டிதனாகவா ஆகவேண்டும்? சுலோகங்கள் புரிய , எடுத்துகாட்டுகள் தெரிய சமஸ்க்ருத அறிவு வேண்டும். தவிர, இந்தியா முழுதும் உள்ள மொழிகளில் அதிகம் தேர்ச்சி வேண்டுமா? சமஸ்க்ருதம் தெரிஞ்சாப் போதும்”

“இப்ப படிச்சு…”

“இதான் ப்ரச்சனை. தெரிந்து கொள்ள ஆர்வம், முயற்சி அதில் ஒரு மகிழ்ச்சி. இது மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வில் விளையாடுங்கள். இது தெரிஞ்சு என்ன ஆகப்போகிறது? என்பது மேலோட்டமாக தர்க்க ரீதியாக சரியாகத் தோன்றலாம். ஆனால் கடைசி வரை ஒன்றுமே செய்யாம போய்ச்சேருவோம். அப்புறம் பேசுவோம். இன்னிக்கு ஒரு பரீட்சை இருக்கு.”

பெரியசாமி சாரை அடுத்த முறை ஊர் செல்லும்போது சென்று பார்க்கவேண்டும்.

பகல் 12 மணிக்குப் பின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *