“இந்தி அறியாததால், தமிழர்கள் எதையும் இழக்கவில்லை”
இப்படியாக ஒரு விவாதம் கொச்சி பல்கலையின் மாணவர் விடுதியில் 1987 மழைக்காலத்தில் நடந்து கொண்டிருந்தது. அரசியல், மொழிவெறி என்பதைத் தாண்டிய ஒரு ஆரோக்கிய விவாதமாக அது இருந்ததால், பல முறை வேடிக்கை பார்க்கச் சென்றிருக்கிறேன். அன்றும் , இக்கருத்தை முன் வைத்தவர் ஒரு மலையாளி.
மறுவாதம் செய்ய வேண்டிய சதானந்தன் நாயர் , ஒரேயொரு வார்த்தை சொன்னார். எதிரில் இருந்த வாதி, எழுந்து , மேஜைக்குக் குறுக்கே கை நீட்டி அவரைப் பாராட்டினார். “100% ஒத்துக்கொள்கிறேன்”.
அவர் சொன்ன வார்த்தை ‘ லதா மங்கேஷ்கர்”
அன்று லதாவின் பாடல்கள் அதிகம் கேட்டதில்லை. சிலோன் ரேடியோ, வீட்டில் காஸெட்டுகள் என்பன பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களாக மட்டுமே இருந்தன. போபாலில் பணி செய்து வந்திருந்த , கோவிந்த ராஜன் அண்ணன், இந்தி சினிமாப் பாடல்களைத் தொகுத்து ஒரு கேஸட் வைத்திருந்தார். அதில் லதாவின் குரல் கேட்டு வியந்திருக்கிறேன். மற்றபடி ஆஷாவின் பாடல்கள், ஆர்.டி பர்மம் இசையில் பெரிதாகப் பரிணமித்த பாடல்கள் மட்டுமே அறிந்தவன் நான்.
ஒரு குறுகுறுப்புடன் , சதானந்தனை, விவாதம் முடிந்தவுடன் அணுகினேன். “அதென்ன லதாவின் குரல் கேட்காதது அத்தனை இழப்பா, தமிழகத்துகு?”
அவர் பொறுமையாகப் பதிலளித்தார். “ லதாவின் பாடல் என்றால் குரல் இனிமை மட்டுமல்ல, அவ்ரது உணர்ச்சி, பாடல் வரியினை தன் உணர்வில் பலப்படுத்துவது என்றொரு மாயாஜாலம் உண்டு. நம்ம ஊர் லீலா, சுசீலா, ஜானகி, என்பவர்கள் போல. ஆனால் அதையெல்லாம் தாண்டி நாமறியா ஒரு இசைக்கவர்ச்சி அவர் பாடலில் உண்டு. அனுபவித்தால்தான் தெரியும். Her voice is enigmatic”
அதன்பின் பல ஆண்டுகள் இந்தியா முழுதும் சுற்றியதில் சில பெயர்களே எல்லாத் திக்கிலும் அறிந்திருக்கக் கண்டேன். அதில் ஒன்று லதா மங்கேஷ்கர். சிலருக்கு அவர்மேல் விமர்சனம் உண்டு , குறிப்பாக பெங்காலிகள். அதையும் தாண்டி அவர் பெயர் நாகலாந்து -அஸ்ஸாம் எல்லைப் பகுதி, மற்றும் நுமாளிகர் போன்ற இடங்களிலும் கேட்டு வியந்திருக்கிறேன். இதற்குக் காரணம் பாலிவுட் பாடல்கள் என்றாலும், அப்பாடல்கள் பெயர் பெற்ற்தற்கு அவர் குரல் காரணம்.
இசைக்குடும்பம், தந்தை, சகோதரன், சகோதரி என அனைவரும் இசையில் பெற்றவர்கள். போராடி முன்னுக்கு வந்த குடும்பம் அது. அதற்கு முன்பே, போர்ச்சுக்கீசியர்களிடம் போராடித் தங்கள் மதம், நம்பிக்கை, கடவுள், கோவில் எனக் காப்பாற்றி வந்த இனம் அவருடையது. போர்ச்சுக்கீசியர் காலத்தில், கிறித்துவர்கள் , கோவாவில் 99% கோவில்களை அழித்தபோது,புகழ் பெற்ற மங்கேஷ் ஸ்வாமியின் திருவுருவச் சிலையை அடர்ந்த காட்டில் மறைத்துவைத்துக் காத்துப் பின் கொண்டுவந்த பாரம்பரியம் கொண்டவர்கள் மங்கேஷ் என்ற பகுதியைச் சார்ந்தவர்கள். எனவே ,அவருக்கு தாய் மதப்பற்றும் , அதனைக் காக்கும் உந்துதலும் மிக அதிகம்.

தாய் நாட்டின் மீது அதீதப் பற்று கொண்டவர் லதா. இராணுவத்தினருக்காகப் பாடியதாக இருக்கட்டும், அதன்பின் ஒவ்வொரு நிகழ்விலும், இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து, மரியாதை செய்வதிலாகட்டும், அவர் , தேசப்பற்றில்லாத நிழல் உலகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தி திரைப்பட உலகில் தனியாக , தைரியமாக நின்றார். ஊரி படுகொலை நடந்தபோது, இந்திய வீரர்களுக்கு 1 கோடி ரூபாய்கள் நன்கொடை வழங்கினார். சமீபத்தில் ஜெனரல் பிபின் ராவத் இறந்தபோது, அவரது இரங்கல் செய்தி மனதை உருக்குவதாக இருந்தது.
தீபாவளியின் போது இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து, அவர்களது தியாகத்திற்கு வணக்கம் செலுத்தி, உங்கள் சகோதரி லதா என்று அவர் வெளியிட்ட சமீபத்திய வீடியோ பிரபலமானது. அவரது தீவிர தேசபக்தியைச் சோதிக்காமல், பாலிவுட் அடங்கி நின்றது.

பண்டிட் பீம்சேன் ஜோஷியுடன் அவர் பாடிய “ ராம் ஷ்யாம் குண கான்” என்ற இராம, க்ருஷ்ண பஜனைப் பாடல் ஆல்பம் மிகப் பிரபலமானது. இன்றும் என் வீட்டில் காலையில் ஒலிப்பது அப்பாடல்கள்தாம். அதில் ஒரு பாடலில், பீம்ஷேன் ஜோஷி, உணர்ச்சி வசத்தில் உச்சஸ்தாயில் எடுக்க, லதா, அவரை விட சற்றே கீழ்ஸ்தாயியில் எடுப்பார். இதனை , இந்துஸ்தானி இசை அறிந்த நண்பர்களிடம் பகிர்ந்தேன். அதில் ஒருவர் “ அது குரு மரியாதை” என்றார். இதே போல் , எம். எஸ் .சுப்புலக்ஷ்மி, அவரை விட மூத்த ஒரு ஆண் பாடகருடன் பாடும்போது, சற்றே உயர்ந்த சுருதியில் அப்பாடகர் எடுக்க, எம் எஸ் அம்மா, ஒரு சிரிப்புடன், சற்றே இறக்கிப் பாடினார் எனக் கேட்டது நினைவுக்கு வந்தது. ( இதனை உறுதி செய்ய இயலவில்லை. செவி வழிச் செய்தி). குரு பக்தி, என்பது பாடும் விதத்தில் பாடாமல் விடுவதல்ல, குருவுக்கு அந்த இடத்தில் மரியாதை அவரை உயர்த்தி இருக்கச் செய்தல் என்பதாகக் கொள்ளவேண்டும். லதா அதில் வாழ்ந்து காட்டிய, அக்காலப் பாடகிகளில் ஒருவர்.
வயதாக ஆக, குரல் பிசிறடிக்காமல், செழுமையாகிக்கொண்டே வந்த சில பாடகிகளில் ஒருவர் லதா. நாளாக ஆக, முதிர்வில் செறிந்து சிறக்கும் ஒயின் போன்றது அவர் குரல். கிரிக்கெட்டில் அதிக நாட்டமுடையவர் அவர். இந்தியா வெற்றிபெறும்போதெல்லாம், தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தி, சச்சின் டெண்டுல்கருக்கு ஆசி வழங்கினார்.
அவரது மிகச்சிறந்த பாடல்கள் என்றெல்லாம் வரிசைப்படுத்தப் போவதில்லை. பல ஜன ரஞ்சகப் பாடல்களைப் பாடியிருந்தாலும், பல பாடல்கள் தனித்து நிற்கின்றன. அவரது குரல் மிக இனிமை வாய்ந்த ஒன்று என்பதால், மரியாதை அவருக்கு அதிகம். குரலில் பல வீச்சுகளைக் காட்டி, பல்வகைத் திறமையை (versatility )வெளிப்படுத்திய ஆஷா போஸ்லே, தங்கையாக இருந்தாலும், தொழில் முறையில் இருவருக்கும் ஆரோக்கியமான போட்டி உலவியது. லதாவுக்கு இருந்த தனி மரியாதை ஆஷாவுக்குக்கூட கிடையாது.
பல விமர்சனங்களுக்கு உரியது லதாவின் தனி மற்றும் பொது வாழ்க்கை. அந்நாளையப் பிரபலப் பாடகரான புபென் ஹஸாரிகா (Bhupen Hazarika)வுடன் லதாவுக்குத் தொடர்பு இருந்தது , என்று ஹஸாரிகாவின் முன்னாள் மனைவி ப்ரியம்வதா படேல் ஹஸாரிக்கா சமீபத்தில் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டார். லதா அதனை மறுக்கவும் இல்லை, சரியென்றும் சொல்லவில்லை. அந்த நிலையைக் கடந்துவிட்டார் எனவே சொல்லவேண்டும்.
1960-90 வரையான காலகட்டத்தில், லதா, ஆஷா சகோதரிகள் பிற பின்னணிப் பாடகிகளை முன்னேற அனுமதிக்கவில்லை என்று நடிகையும், பாடகியுமான சுலக்ஷணா பண்டிட் ஒரு முறை குற்றம் சாட்டினார். “சிறுபிள்ளைத்தனமான பேச்சு” என்று லதா அதனைச் சுருக்கமாக புறத்தே விலக்கினார். அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பாலம் அமைக்க மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் முடிவெடுத்த போது, இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என எதிர்த்து, ‘நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம்” என்று மிரட்டல் விடுத்ததும் சர்ச்சைக்குள்ளானது. பால் தாக்கரே மற்றும் மோடியின் ஆதரவாளர் லதா.
அவருக்கு எதிர்ப்புகளும், ஆபத்துகளும் வந்தவண்ணமிருந்தன. 70களில், அவரது உடல்நலம் திடீரெனக் குன்றியது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டவுடன், புதிதாக அவர் வீட்டில் சேர்ந்திருந்த சமையல்காரி , திடீரென மறைந்தார். அதன்பின் லதாவின் மற்றொரு சகோதரி அவருக்கான உணவைத் தானே பல நாட்கள் சமைத்து வந்தார். இன்றுவரை அந்த விஷம் வைக்கத் திட்டமிட்டவர் யார்? எனக் கண்டறியப்படவில்லை. பல மிரட்டல்கள் அவருக்கு வந்த வண்ணம் இருந்தன. அதெற்கெல்லாம் மங்கேஷ்கர் சகோதரிகள் அஞ்சிவிடவில்லை.அன்றைய அரசியலில் நேரு, மராட்டிய மாநிலத்தில் பால் தாக்கரே , ஷரத் பவார் போன்றவருகளுடனான தொடர்பும் ஒரு காரணமாயிருக்கலாம்.
அவரது மரணம், பாலிவுட் மட்டுமல்ல, இந்துஸ்தானி இசைக்கும் பெரும் இழப்பு.
ரேடியோ 91.9 MHz இன்று சொன்னது போல் “ லதா – 1929 முதல் என்றும்”
மேலும் வாசிக்க :
https://www.ptcpunjabi.co.in/salute-lata-mangeshkar-donates-rs-1-crore-to-indian-soldiers