பிரகாரத்தில் இரண்டாவது முறை சுற்றி வரும்போது, முன்னே சென்றுகொண்டிருந்த இருவரையும் அடையாளம் கண்டுகொண்டேன். ராகவன் மாமா கொஞ்சம் சாய்வாக நடக்கிறார் இப்போதெல்லாம். சாந்தா மாமி அவரது ஆமை வேகத்துக்கு ஈடு கொடுத்து வலுக்கட்டாயமாகத் தானும் மெதுவாகச் செல்கிறார்.

‘ஹலோ’ என்றதில், கண்டு வியந்து கொரோனா தாண்டி உயிருடன் இருப்பதில் நிம்மதியடைந்தனர் இருவரும். தோளில் கை வைத்து, “ஆத்துக்கு வாடா” என்றார் மாமா பாசமாக. “இன்னிக்கு என் தங்கைக்கு ஸ்ரார்த்த நாள். நாம செய்ய முடியாதுன்னாலும், உறவுன்னு இருக்கில்லையா? அதான் இங்க வந்து அன்னதானம் பண்ணிட்டு, அர்ச்சகர் ஸ்வாமிகளுக்கு  ஏதோ நம்மாலான வஸ்த்ரம்,  சம்பாவனை கொடுத்துட்டு கிளம்பிட்டிருக்கோம். நீ வந்துட்டை! விசாயிருக்கியா? ( நலமாயிருக்கிறாயா?)”   திருநெல்வேலிப் பக்கத்து மொழி. இத்தனை வயதாகியும் அவருக்கு மாறவில்லை.

இருநாட்களில் அவரது வீட்டிற்கு அருகே செல்லவேண்டியிருந்தது. வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். இருந்தார். “ அட! வாடா, வா!” என்றார் நிஜமாக மகிழ்ந்து. “ டீ சாந்தா, யாரு வந்திருக்கா பாரு” என்றவர் நான் அமருமுன்னே “ . வரேன்னு சொல்லுவை ..  வந்ததேயில்லை”  எனத் தொடங்கினார்.

எதையெதையோ பேசி வந்தவர் , “ டேய். அந்த ஆச்சார்ய ஹ்ருதயம் , பி.ஆர்.புருஷோத்த நாயுடு விளக்கவுரை, வாங்கித்தர்றேன்னியே? எங்க கிடைக்கும்னு சொல்லு .  நான் பாத்துக்கறேன். “

“இல்ல மாமா, நான் அடுத்த வாரம்…”

“கிழிச்சே. இதே வார்த்தை ரெண்டு வருஷமாச் சொல்லிண்டிருக்கை. “ மாமா கொஞ்சம் நேராகப் பேசக் கூடியவர். சிலருக்குப் பிடிக்காது.

“மாமா” பேச்சை மாற்றினேன் “ உங்க தங்கைக்கு ஸ்ராத்த்தம்னு சொன்னீங்க. யாரு அவங்க? பாத்ததில்லையே? “

காபியோடு சாந்தா மாமி வந்தார் “ நீ பாத்திருக்க  மாட்டை. கோமளா இங்க வந்ததில்லை. ரெண்டு வருஷமுன்னாடி போயிட்டா”

“ஓ. மாமாவுக்கு தங்கை உண்டுன்னு கேள்விப்பட்டதில்லை. உங்க அக்கா பத்மா வருவாங்க. பாத்திருக்கேன்”

மாமாவும் மாமியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “ கோமளவல்லி, என்னோட சித்தி பொண்ணு. சித்தின்னா.. அப்பாவோட ரெண்டாம்தாரம்”

நிமிர்ந்து உட்கார்ந்தேன்.  மாமா சொல்லத் தொடங்கினார்

“ என் அப்பா ரயில்வேஸ்ல பெரிய உத்தியோகம். நில புலன் எல்லாம் உண்டு.  அம்மா விஷக்காய்ச்சல்ல போனா. அப்ப எனக்கு மூணு வயசு. பத்மாவுக்கு ஆறு. அப்பா ரெண்டாம் கலியாணம் பண்ணிக்கலை. தானே வளர்க்க முயற்சித்தார். முடியாம, எங்களை  ஸ்ரீவைகுண்டத்தில் ,  தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு, உத்யோக மாற்றலில் மைசூர் பக்கம்  போனார்.

அங்க பக்கத்து கிராமத்தில் இருந்த கோவில் அர்ச்சகர் வீட்டில் சாப்பாடு. அந்த குடும்பம் தொடங்கலாக , நாலு குடும்பங்கள் அங்கு தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்திருந்தனர்., அருகிலிருந்த வீட்டில் இருந்த  தமிழ்குடும்பத்தில் மரகதவல்லியிடம்  பரியச்சம். மரகதவல்லி வீட்டில் மிக வறுமை. அவர் தந்தை, ஆஸ்த்மாவில் அவதிப்பட்டு போய்ச்சேர்ந்தார். மரகதம்  தனியளானாள். அவளுக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கட்டும் என அப்பா அவரை மறு மணம் செய்தார்.  தாத்தா பாட்டி முதலில் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், தங்கள் வயது முன்னிட்டும், எங்கள் எதிர்காலம் கருதியும் எங்களை அவரிடம் ஒப்படைத்தனர்.

“சித்தி எங்களுக்கு அம்மாவாகவே இருந்தாள். சித்திக்கு 73ல கோமளவல்லி பிறந்தாள். தாத்தா பாட்டி போட்டிருந்த கண்டிஷன் படி,  அம்மாவின் நகையெல்லாம் என் அக்கா பத்மாவுக்குப் போனது. சித்தி ஒரு வார்த்தை பேசவில்லை. கோமளாவுக்கு 94 ல கல்யாணம் ஆச்சு.  ரெண்டே வருஷத்துல , அவள் புருஷன் ஒரு விபத்துல போய்ச்சேர்ந்தார். அதிர்ச்சியில அப்பா முதல்ல போனார். சித்தியும் போனாள். கோமளா தனியளானாள். நானும் பத்மாவும் உதவி செய்தோம் என்றாலும், நாங்கள் கொஞ்சம் விலகியே இருந்தோம். சிறுவயதில் கேட்ட தவறான அறிவுரைகள். எங்கே, கொஞ்சம் நெருங்கினால், கூட வந்து ஒட்டிக்கொண்டு விடுவாளோ? என்ற பயமும், சுயநலமும்.

ஆனாலும், கோமளா எங்கள் வீடுகளுக்கு வருவாள். அவளது கணவனின் பென்ஷன் பணம் ஏதோ வந்து கொண்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் வீட்டில் தனியளாக வசித்தாள் என்றாலும், பாதி நாள் அந்த ஊரில் ப்ரம்மோத்சவம், இங்க தேர், இங்க கருட சேவை எனக் கிளம்பிவிடுவாள். ஒன்பது கஜம் மடிசாரில் பஸ்ஸில் எங்கும் பயணித்தாள். பேச்சு கொஞ்சம் அப்ரேஸிவ் ஆக இருக்கும். கிராமத்துப் பேச்சு “ நிறுத்தி, எதோ பழைய நினைவுகளில் மூழ்கினார்.

“வீட்டு வாசலில் வரும்போதே “ அவன் இருக்கானா? “ என்று என்னை உரத்த குரலில் கேட்டுக்கொண்டேதான் வருவாள்.  “உள்ள வந்து பேசேண்டி” என்றால் “ டேய், உம் பேரு சொல்லித்தானே கேட்டேன்? ஊர்ல சொல்றாமாதிரி, அந்த சொட்டைத்தலை ராகவன் இருக்கானான்னா கேட்டேன்?”

சாந்தா மாமி சிரித்தாள் “ மானம் போகும். எங்க என்ன பேசறதுன்னே  கிடையாது கோமளாவுக்கு.  வாசல்ல நின்னுண்டு  எதிர்த்தாத்துப் பொண்ணுகிட்ட “ டீ, நீ தூரம்னா சொன்னா உங்கம்மா? வாசல்ல வந்து பால் வாங்கிண்டிருக்கை? உள்ள போ” என்பாள் . அந்தப்பெண்ணின் அம்மா “ பாத்துப் பேசச்சொல்லுங்கோ அவளை” என்று எச்சரித்துப் போவாள் “

மாமா தொடர்ந்தார் “ பத்மா , அவளை வீட்டுக்குள் வரவே விட மாட்டா. பத்மாவுக்கு ஒரே பெண். சித்தாரா-ன்னு பேரு. பி.ஈ பண்ணிட்டு, பெங்களூர்ல சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாத்துண்டிருந்தா. அங்க ஒரு பையனைக் காதலிக்கறேன்னு ஆரம்பிச்சி, கலியாணம் பெருசாத்தான் பண்ணிக்கொடுத்தா, பத்மா.

ரெண்டு மாசத்துல தெரிய வந்தது. அந்தப் பையனுக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு. சித்தாரா அவனைக் கேட்டதுக்கு, அவளை சித்ரவதை பண்ணி… நகையெல்லாம் பிடுங்கி வைச்சு… அவன் அம்மா அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியும்.  பத்மாவுக்கு பைசா ஜாஸ்தின்னு, இந்த கலியாணத்துக்கு ஒத்துக் கொண்டிருக்கா.

பத்மாவோட புருஷனுக்கு பக்க வாதம் வந்து வீட்டுல விழுந்தார். பத்மாவுக்கு அவரைப் பாக்கறதா, பொண்ணோட வாழ்வைப் பக்கறதான்னு தெரியலை. நான் அப்ப கத்தார்ல இருந்தேன். என் பையன் சிங்கப்பூர்ல . என்ன செய்ய முடியும்?”

சாந்தா மாமி தொடர்ந்தாள் “ நான் அப்ப  பத்மா வீட்டுக்கு மெட்ராஸுக்குப் போயிருந்தேன். கோமளா , காஞ்சிபுரம் கருட சேவைன்னு வந்தவள், என்னைப் பாக்க அங்க வந்தா.  “ உன்னை எப்ப பாக்கறது? ஆச்சு, இனிமே நீயும் கத்தார், சிங்கப்பூர்னு போயிடுவை. சரி, வந்திருக்கையே, பாக்கலாம்னு வந்தேன். விசாயிருக்கியா?”

பத்மாவின் முகம் வாடியிருக்க , கோமளா கேட்டாள் “ டீ, பக்கவாதமெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை இப்பெல்லாம்.  அத்திம்பேர் சரியாயிருவர். பொண்ணு எப்படியிருக்கா? இன்னமும் குளிச்சிண்டிருக்காளா? விசேஷம் உண்டா?”

பத்மா உடைந்து அழ, கோமளா விஷயம் அறிந்தாள். அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் .

“கோமளா, நீ என்ன செஞ்சிட முடியும்-ந்னு நானும் உங்கிட்ட என் ப்ரச்சனையைச் சொல்லிண்டிருக்கேன் பாரு..  விடு. என்னமோ என் விதி” என்றாள் பத்மா

அதென்ன அப்படிச் சொல்லிட்டாய் ? “ ஆவேசமாக எழுந்தாள் கோமளா “ அவனை மாறு கை , மாறு கால் வாங்கி வெட்டிப் போட வேணாமோ? ஊர்ல இருந்திருந்தா கதையே வேற. இரு “  என்றவள் பையில் வைத்திருந்த மொபைலை நோண்டினாள்.

“ அலோ, விஜய குமாரியா? நான் கோமளா மாமி பேசறேன். விசாயிருக்கியா? எப்ப ப்ரீயா இருப்பை சொல்லு. ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்” என்றவள் சுருக்கமாகச் சொன்னாள்.

“இதான் விசயம். இப்ப என்ன செய்யலாம்னு சொல்லு. மெட்ராஸ்லதான் இருக்கேன். அட்ரஸ் சொல்றேன். “

வக்கீல் விஜயகுமாரியின் கார் வந்து எங்களை அவரிடம் அழைத்துச் சென்றது. அவர் அமைதியாக அனைத்தும் கேட்டார். என்ன செய்யவேண்டுமென்பதைச் சொன்னார்.

“விஜயா எங்காத்துக்காரரோட நண்பரோட பொண்ணு. படிக்கறச்சே பணம் இல்லைன்னதும், என் சங்கிலியை வைச்சுக் கொடுத்தேன். எனக்கெதுக்கு நகை நட்டெல்லாம்? இது படிச்சது. இப்ப பாரு, போடு போடுன்னு போட்டிண்டிருக்கு. இப்பத்தான் இவகிட்ட வர்றேன்”

சாந்தா மாமி தொடர்ந்தார் ” “கோமளா அத்தோடு நிற்கவில்லை, பெங்களூர் சென்று, அவளது தொடர்பில் இருந்த இருவரைப் பிடித்து, போலீஸ் சகிதம் சித்தாராவின் புக்ககத்திற்குப் போனாள்.“

“நீங்க யாரு இந்த விஷயத்துல தலையிடறதுக்கு ?” கத்தினான் , சித்தாராவின் கணவன்.

“ அவளோட சித்திடா நான். சித்தின்னா யாரு தெரியுமா?  சிற்றாய். இளைய தாய். எனக்கு கேக்க உரிமை இருக்கு. கேப்பேன். அவளுக்கு யாருமில்லைன்னு நினைச்சியாடா? நான் இருக்கேன். ” அவள் உறுமியதில் அவன் குடும்பம் வெலவெலத்துப் போனது . ” கோமளான்னா யாருன்னு எங்கூர்ல .. வேணாம், இங்கயே காட்டறேன் உனக்கு. “

மருமகள் சித்திரவதை என்று போலீஸ் , அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனது. அடுத்த நாள் , அவள் கணவனின் அலுவலகத்தில் மனித வளத்துறை அதிகாரியிடம் கோமளா நின்றிருந்தாள். “ இவனை ஏன் வேலை விட்டு நீக்கக்கூடாது? என்ற அளவில் மகளிர் மன்றத்தில் இருந்து அங்கு கேள்விகள் பறக்க, அவன் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டான். அவன் காதலி மாயமாக மறைந்தாள்.

சென்னையில் தங்கி, பெங்களூர் சென்னை என அலைந்து, விவாகரத்து வாங்கி, சித்தாராவின் நகை, பணம் முழுதும் வாங்கி, அவனது ப்ளாட்டில் 50 சதவீதம் எழுதி வாங்க மனுப் போட்டு,  பத்மாவுடன் , அவள் கணவருக்கு சிகிக்சை செய்ய உதவி… “ சாந்தா மாமியால் முடிக்க முடியவில்லை.

“ தங்கை ஒரு தெய்வம் என்பதை அனுபவத்துல பாத்தேன்டா, இவனே” தழுதழுத்தார் ராகவன் மாமா. “ நான் கத்தார் ப்ராஜெக்ட் முடித்து இங்க வருவதற்குள் அனைத்து வேலையும் முடித்து, சித்தாராவுக்கு அடுத்த திருமணத்துக்கு வரன் பார்க்கவும் தொடங்கியிருந்தாள்  கோமளா. நான் வந்தபின் அவள் திருமணம் முடிந்து.. இப்ப நல்லா இருக்கா, வைச்சுக்கோ… எல்லாம் பெருமாள் தாயார் அனுக்கிரகம்”

“கோமளா ஆசீர்வாதம்” என்றாள் சாந்தா மாமி. கோவிட் ல் கோமளா மாமி மறைந்ததை இருவரும் சொல்லவில்லை. எனக்குப் புரிந்தது.

“ கூடப்பிறந்தாத்தான் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ ஆறதில்லை.  ஒரு பாட்டுல வரும்பாரு “ சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை; ஒரு துணையிலாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை.”. ரத்த சம்பத்தத்தை மனசுதான் தீர்மானிக்கறது. அவள் பிறப்பெல்லாம் உயர்ந்த பிறப்பு “ சாந்தா மாமி, கண்ணைத் துடைத்துக் கொண்டாள்

“அது பிறப்பு இல்லை. அவதாரம்.” என்றார் மாமா . “‘எப்பெல்லாம் அதர்மம் தலை தூக்குமோ, அப்பெல்லாம் நா வருவேன்’னான் ,கண்ணன், கீதையில.  இப்ப பெற்றோர் – பிள்ளைகள், அண்ணன், தம்பி உறவே இல்லாமப் போயிண்டிருக்கச்சே, இப்படியெல்லாம்  வலிஞ்சு உறவு வர்றது ஒரு அவதாரம். “

கோமளவல்லி  –  பதினோராம் அவதாரம்.

6 thoughts on “கோமளவல்லி

  1. நிச்சயமாக கோமளவல்லித் தாயார் ஒரு அவதாரமே!

  2. கொஞ்ச நாளாவே கதை,சிறுகதைகள் படிக்கிறதுல்ல….இன்னைக்கி படிக்க வச்சிட்டிய🙏🙏🙏🙏🙏

Leave a Reply to kasturisudhakar(கஸ்தூரி சுதாகர்) Sudhakar kasturi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *