வைணவ நூட்களை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானோர் , நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தோடு நின்றுவிடுவார்கள். அதுவும் அதன் ஆழ்பொருள் உணராமலே, அனுசந்திப்பது என்ற அனுபவத்தோடு நிற்பவர்கள் பலர். ப்ரபந்தத்தின் பொருள் விளங்க, ஆயிரம் வருடங்களின் முன்னான சொற்களின் பொருள் புரியவேண்டும், அதனைப் பயன்படுத்திய இடத்தின் காட்சியமைப்பு, பின்புலம் புரியவேண்டும்; அதோடு பக்தி பொங்கி வந்தால் மட்டுமே , முழுப்பரிமாணத்தில் ஒரளவு புலப்படும். இதற்கு, பிரபந்தம் திராவிட வேதம் என்றும் தமிழ் மறையென்றும் கூறப்படுவதும் ஓர் காரணம். எளிதில் விளங்கிக் கொள்ள இயலாது.

இராமானுசர் காலத்திலோ, அதன் பின்னாலோ, பிரபந்தம் போல் கடினமல்லாது, அதே நேரம் சொற்சுவையும், பொருட்சுவையும், பக்தியும் பெருக நின்ற பாடல் தொகுதிகள் உள்ளனவா? என்றால், இராமானுசர் காலத்திலேயே இயற்றப்பட்ட ” இராமானுச நூற்றத்தந்தாதி’ என்பதைக் குறிப்பிடலாம். சற்றே எளிமையாக இருப்பினும், பக்தி பெருக நிற்கும் இராமானுச நூற்றந்தாதி, நாலாயிரத்தில் சேர்க்கப்பட்டபின், அதன்பின்னால், அந்த வகையில் எழுதப்பட்ட பாடல் தொகுதிகள் உள்ளன என்றாலும், சற்று அரிதாகவே இருக்கிறது.

இதற்கு வரலாறும் ஒரு காரணம். மாலிக்காபூர், உலுக்கான் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் அலையலையாகத் தாக்கப்பட்டதில், பக்தர்களும் ஏராளமாகக் கொல்லப்பட்டார்கள் ” பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்” பற்றி மேல் விவரங்களுக்கு அறிந்து கொள்வது நலம். அப்படி பக்த கோடிகள் அழிந்ததில், அவர்களது கையில் இருந்த செல்வமான பல ஏடுகளும் அழிந்தன. இதில் எத்தனை நமக்குத் தெரியாமல் அழிந்திருக்கலாமென்பதில் ஒரு கணக்கு இல்லை.

அதிர்ஷ்ட வசமாக, கிட்டிய ஒரு தொகுதி அஷ்ட பிரபந்தம் எனப்படும் எட்டு பாடல் தொகுதிகள். இவற்றை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்ற அழகிய மணவாள தாசர். இவரது காலம் 12ம் நூற்றாண்டாக இருந்திருக்கக்கூடும். இவரது வர்லாறு பற்றிய செய்திகளில், இவர் திருவரங்கத்து அமுதனார் அவர்களின் பேரன் எனவும், கூரத்தாழ்வானின் மகனான பட்டர் ஸ்வாமிகளின் சீடர் எனவும் வருவது, இந்த ஊகத்திற்குக் காரணமாக அமைகிறது.

திருமங்கை என்ற சோழ தேச தலத்திற் பிறந்து, திருவரங்கப் பதியான அழகிய மணவாளர் பெருமானுக்குத் தாசனாக வாழ்ந்ததால் அழகிய மணவாள தாசர் என்ற பெயர் பெற்றதாகவும், அவரது இயற்பெயர் பிள்ளைப்பெருமாள் என்பதாகவும் அறிய முடிகிறது. இவர் ராஜ சபையில் பணி செய்து, அரங்கனது திருவிளையாட்டால், மன்னன் அவரை மிக மதித்து, திருவரங்கக் கோவிலிலேயே ஒரு இடம் அமைத்துத் தந்து அதில் வாழ்ந்து வரும்காலம், திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கட மாலை, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி, ஸ்ரீரங்க நாயகரூசல் என்ற எட்டுப் பாடல் தொகுப்புகளை இயற்றினார். இவை முறையே தொகுக்கப்பட்டு, அஷ்டப் பிரபந்தம் ( எட்டு நூல்கள் ) என்றாகியது. திருநரையூர் நம்பி மேக விடு தூது என்ற நூல் இவர் எழுதியது என்பர். இதற்குச் சரியான ஆதாரங்கள், ஏடுகள் கிடைக்கப் பெறவில்லை.

ஸ்ரீரங்க நாச்சியார் ஊசல் என்ற நூற்தொகுப்பை இயற்றிய கோனேர்யப்பனையங்கார் என்பார், இவரது திருப்பேரனார் என்பர்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரது பாடல்களின் செழுமை, பல செய்யுள் வடிவங்களில் அமைப்பு, சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தி, ஆழ்ந்த பரவலான பக்தி உணர்வு அனுபவித்து மகிழ வேண்டியவை. இதனாலேயே இவர் திவ்யக் கவி என்ற பெயரும் பெறுகிறார். யமகம் , சிலேடை, அந்தாதி, திரிபு என்ற பல வகைகளைப் பாடல்களில் சேர்த்து பெருவியப்பிலும், ஆழ்ந்த பக்தியிலும் ஆழ்த்துகிறார். யமகம் என்ற வடமொழி இலக்கண வகையானது, ஓரே சொல், செய்யுளில் பல வரிகளில் பல இடங்களில் , வேறு வேறு பொருளில் வந்து நிற்பது. தமிழில் மடக்கு அணி என்பது யமகம். இதனை திருவரங்கத்தந்தாதியில் விரைவிலேயே காண்போம்.

இவரது கவித் திறமையையும், பக்தியையும் போற்றிப் பலத் தனிப்பாடல்கள் உள்ளன. சிலவற்றை இங்கு காண்போம்.

  1. தென்கலை வைணவன் செகமெலாம் புகழ்

இன்கவிப் பிரபலன் இணையில்(லா) பட்டர்தம்

நன்கணத்தினர்களில் ஒருவன் நாரணன்

பொன் கழலன்றி மற்றொன்றும் போற்றிலன்.

2. மருஅழகிய மணவாளதாசன் என்(று)

ஓருபெயர் புனைந்தவன் உரைக்கும் ஓர் சொலாற்

பொருள் பல தரும் கவி பொறிப்புக் பொற்பினிற்

பெருமிதன் எனப் பலர் பேசும் பெற்றியான்.

3. செவ்விய சொற்சுவை சிறிதும் தேர்ந்திடா(து)

அவ்வியப்போர் பொருமவர்களன்றி மற்று

எவ்வியற்புலவரும் இசைந்து நாள்தொறும்

திவ்வியகவியெனச் செப்பும் சீர்த்தியான்.

தீவிர திருமாலியலார் ( ஸ்ரீவைஷ்ணவர் ) என்பதால், பல செவி வழிக் கதைகள் இவரது சைவ வெறுப்பு குறித்து மலிந்தன. அவற்றை மறுத்துக் கூறும் வகையில் பல பாடல்களும் உள்ளன.

சிவனை நிந்தனை செய்தவனேயென

இவனைச் சிற்சில இளஞ்சைவர் ஏசுவார்

அவன் தன்மாயவன் ஆகத்திற்பாதியென்று

உவந்து பாடிய பாக்களும் உள்ளவே

அன்றைய காலத்தின் கட்டாயம் என்றும் , தன் மரபு காத்தல் என்பதால் வந்தது என்றும், இன்று சமயப் பூசல்களுக்கு இடம் கொடாது, பாடல்களின் செறிவையும், பக்தியையும் நாம் உணர்ந்து செல்லவேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *