“பையன் என்னமோ கேக்கறான். பதில் சொல்லுங்கோ, பாப்போம்”

சுந்தர் ஐயங்கார் ( பெயரில் ஐயங்கார் என்றிருப்பதால் அவர் தீவிர வைணவரல்ல. மூன்றாம் தலைமுறையாக பிறந்ததே மும்பையில் என்பதால், ஸர் நேம் என வந்தது) கேட்டுவிட்டு, ஒரு புறமாகச் சாய்ந்து, தன்னிரு கைகளையும் தட்டி கால்களுக்கிடையே சேர்த்துவைத்துக்கொண்டு சிரித்தார். முகத்தில் பெருமை.

“என்னடா கேட்டே?” என்றேன். ஒருவருடம் முன்பான உரையாடல் இது. கோவிட் தீவிரம் அறியாது, பலரும் கோவிட் பற்றி பாட்டு, கவிதை என எழுதிக் கொண்டிருந்த காலம்.

“எதுக்கு நிறைய கடவுள் நமக்கு வேணும்? ஒரே கடவுள் போதுமில்லையா? அவருக்குத்தான் எல்லா சக்தியும் உண்டே?”

படிக்கிற ஸ்கூல் மதமாற்றிகள் அல்ல.

“வெரிகுட்! நல்ல கேள்வி, உனக்கு சயன்ஸ் பிடிக்குமா?”
“பிடிக்கும்” சுருக்கமாக.
“பிஸிக்ஸ்? கெமிஸ்ட்ரி… பயாலஜி…?”

“பிஸிக்ஸ்”
“ஓ! அப்ப நம்மாளு! பிஸிக்ஸ்ல லைட் பத்திப் படிச்சிருக்கியா? லேஸர்…”

“ம்! ஒரு காலேஜுக்கு கூட்டிண்டு போனாங்க. அங்க குட்டி, பெருசு , ரொம்பப் பெரிய லேஸர் பாத்தேன். குட்டி லேஸர், சிகப்பு கலர்ல, எல். இ.டி மாரி இருந்தது.”


“க்ளாஸ் B லேஸர்.. லேஸருக்கும் சாதாரண லைட்டுக்கும் என்ன வித்தியாசம்?”


அவன் பிரகாசமானான் ” லேஸர்ல ஒரு வேவ்லெந்த் லைட் மட்டும்தான் வரும். ரெட்-நா ஒரேயொரு ரெட் மட்டும். அது ரொம்ப ஸ்ட்ராங்கா ரொம்ப தூரம் சிதறாமப் போகும். இன்னொரு லேஸர் அதே வேவ்லெந்த்ல இடைமறிச்சா, கருப்பும் வெளுப்புமா பட்டை பட்டையா தெரியும். இல்ல ஹோலோகிராஃபி உண்டாக்கலாம்”

அவனை வியப்புடன் பார்த்தேன் ” டேய்! இதெல்லாம் காலேஜ் தாண்டினப்புறம் எனக்குத் தெரிஞ்சது! வெரிகுட். இப்ப, ஒரு ரெட் லைட்ல மஞ்சள் கலர்ல ஒரு பொம்மை வச்சா எப்படித்தெரியும்?”

ம்..” யோசித்தான் ” கருப்பு? மஞ்சள் கலர் , லேசரோட ரெட்ல இல்லை, எனவே மஞ்சள் கலரை பொம்மை வெளியிட முடியாது. எனவே…”


“அதாவது, ஒரு கலரா மட்டும் லைட் இருந்தா, மத்த கலர் பொருள்கள் அதனதன் இயல்பான நிறத்துல தெரியாது . இல்லையா? மஞ்சளும், பச்சையும், நீலமும் ஒரே கருப்பு கலர்ல தெரிஞ்சா , குழப்பமா இருக்கும், இல்லையா?”

Taken with thanks from : https://dramatics.org/color-and-light/

“யெஸ்”
“இப்ப, லேசரை விட்டுட்டு, ரூம் கதவைத் திறக்கறேன். சூரிய வெள்ளை ஒளி வருது. எல்லா பொருளும் எப்படித் தெரியும்?”


“அதது அதனோட கலர்ல”


“வெள்ளை ஒளிங்கறது எல்லா நிறமும் கலந்தது. அது பச்சை பந்துல படும்போது, பச்சை மட்டும் வெளியே ப்ரகாசமா வரும். மஞ்சள் கயிறுல மஞ்சள் ப்ரகாசமா வெளிய தெரியும். அததுனோட இயல்புக்கு ஏத்த கலர் வெளிய தெரியும். கரெக்ட்”

With thanks from https://dramatics.org/color-and-light/

“யெஸ்/ ஆனா இதுக்கும் கடவுளுக்…?”


அவனை நிறுத்தினேன் ” பல பண்புகள் சேர்ந்த ஒரு கடவுள், நமது இயல்புக்கு, தேவைக்கு ஏத்த மாதிரி பலதாகக் காட்சியளிக்கிறான். கல்வி வேணுமா, மத்ததையெல்லாம் விட்டுட்டு சரஸ்வதி, செல்வமா? லக்ஷ்மி, இப்படி. தேவைக்கு ஏத்த மாதிரி ஒரு ஒளிக்கற்றை, பல்வேறான பொருளில் படும்போது, அததற்கு ஏற்றதாய் அதனதன் பண்பாய் ஒளிர்கிறது. இது இல்லாம ஒரே கடவுள் , ஒரே நிறம்னு எடுத்தா, மத்த பண்பெல்லாம் தெரியாம கருப்பா குழப்பம்தான் மிஞ்சும். தன் நிறத்தை வெளியிடாத பொருட்கள் அனைத்தும் இருள் என்று அவற்றின்மீது வெறுப்பு வரும். ‘என் நிறத்துக்கு வா’ என்று வற்புறுத்தத் தோன்றும்.

எல்லாம் சேர்ந்தா, ஒரே வெள்ளை ஒளி. ஒரே ஞான விளக்கு. உனக்கு வேண்டிய நிறக்கற்றையை, வேண்டிய இடத்தில் பயன்படுத்து. அது அனைத்தும் ஒன்றிலிருந்து வந்தது என அறி”


“அப்ப லேஸர்?”

“வேணும்” என்றேன் ‘ லேசரின் பலம் அதன் செறிவு, எத்தனை தொலைவு செலினும் சிதறாது இருத்தல். நிறத்துக்கு ஏற்றவாறு எந்த லேசர் வேண்டுமோ அதனைப் பயன்படுத்து. . மற்ற நிறம் தவறு என்பது உனக்கு ஏற்பட்ட நிறக்குருடு என்றறி”

சுந்தர் வாய் பிளந்தார். “நான் எஞ்சினியர். மனைவி சாஃட்வேர். நாங்க இதெல்லாம் படிச்சதில்ல”

“படிக்கணும் என்று நினைத்தால், படிக்கலாம். புத்தி ஒரு பலம்வாய்ந்த கணினி. பயன்படுத்தத் தெரியலைன்னா அதோட குற்றமில்லை. எதைச் சொல்லணும், யாருக்கு எந்த அளவுல சொல்லணும் என்பதுதான் அறிவு. அந்த விதத்தில் நம் பெற்றோர்கள் நம்மை விட புத்திசாலிகள்”

சுந்தர் ஹால் லைட்டை போட்டார் . பளிச்சென எல். இ.டி லைட் ஒளிர்ந்தது.

வெள்ளையாய்.

14 thoughts on “வெள்ளை ஒளியும் கடவுளும்

  1. Wow!
    இவ்வளவு எளிமையாக விளக்க முடியுமா?
    முடியும். திரு சுதாகர் கஸ்தூரி அவர்களால் முடியும்.

    நமஸ்காரம் Sir

  2. உண்மையிலேயே எனக்கு தெரியாது. இப்படி விளக்கினால் புரிகிறது. ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் இதையே பள்ளிகளில் சொற்பொழிவாற்றலாம். மிக்க நன்றி!

  3. ஃபிசிக்ஸ் என்றாலே குதிகால் பிடறிபட ஓடும் என் போன்றோருக்கு இயற்பியலையும் இறையியலையும் ஒருங்கே சொல்லிவிட்டீர்கள் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *