“ஆவுடையக்கா எங்க வீட்டுப்பக்கத்துலதான் இருந்தாங்க” இந்தச் செய்தியில் பரபரப்பானேன். வீரராகவனுக்கு உடனே போன் செய்தேன்.

“ஆங்! அடுத்த தெருன்னு சொல்லலாம்.. தாமரை லே அவுட்ல கடைசி வீடு. நாங்க முல்லை லே அவுட். இதுல ரெண்டு பெட்ரூம்”இடைமறித்தேன். எத்தனை BHK என்பது முக்கியமல்ல. எளவெடுத்தவனே! வாழ்வில் ஒருதடவையாவது ஒழுங்கா கேட்டதுக்கு பதில் சொல்.

“ஆவுடையக்கா போனவருசம் காலிபண்ணாங்கன்னு சொல்றாங்க. கோவிட் நேரம் பாத்தியா? யார் என்ன ஆனாங்கன்னு சரியாத் தெரியலை.

“அடச் சே..

அடுத்ததாகச் சொன்னான் ” போன வருசம் பெப்ரவரில அவங்களைப் பாத்தேன். பழசெல்லாம் நினைவிருக்கு. நாம போன அந்த க்விஸ், கருத்தரங்கு, என் பெயர், மேரிஸ்லந்து வந்தாளே? அவ..ஆங் செல்வ சுந்தரி ( மறந்தது மாதிரி நடிக்கிக்றான் ராஸ்கல். அவளுக்கு இவன் பெயர்ல லவ் லெட்டர் எழுதித்தந்ததே நான் தான்).”

“ஆனா உன்னை நினைவில்ல. ” ஆமா… ஹார்பர்லேர்ந்து ஒரு பய வந்தானே. ஒல்லியா, கண்ணாடி போட்டு…”

சட்டென உள்ளம் தளர்ந்தேன். அக்காவுக்கு என்னை நினைவில்லை… இது சாத்தியமில்லை. இவனெல்லாம் அறியுமுன்னே அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்.

1983. ஈரோடு காஸ்மோபொலிட்டன் கிளப்-ல் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி. Catch Them Young என்று பெயர். திருநெல்வேலியிலிருந்து நானும் மற்றொரு பள்ளிமாணவனும் தேர்வு. பாளையங்கோட்டையில் ஒரு ஆஸ்பத்திரியில் இருக்கும் இறகுப்பந்து கோர்ட்டில் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டோம்.

பிற மாவட்ட போட்டியாளர்களைப் பார்த்து மலைத்துப் போனேன். அதன் முன் வருடத்தில் ஊட்டியிலும் இதே நிலைதான். காரணங்கள் – அவர்களிடம் இருந்தனவை , எம்மிடம் இல்லை. YY என்று அச்சுப்பதிந்த ராக்கெட் அவர்களிடம். எனது Bipan மர ராக்கெட்டை, கம்பிகளின் அழுத்தத்தில் வளையாவண்ணம், ஒரு மர ஃப்ரேமில் மாட்டி, தோளில் சுமந்து , கதை தூக்கிச் சென்ற வானர சேனையை நாங்கள் நினைவு படுத்தினோம். அவர்கள் ஈரோட்டிலும் ஆங்கிலம் பேசினார்கள். எனக்கு மொழி நெல்லைத்தமிழ். அறிந்த ஒரே ஆங்கிலச் சொற்றொடர் “My name is Sudhakar. What is your name?”

முதல் சுற்றிலேயே வெளிவந்த எங்களை எவரும் பார்க்கவில்லை. சரி ஊர் திரும்பவேண்டியதுதான் என்று நினைத்திருக்கையில்,

“தம்பி” என்ற குரல்.”என் பெயர் ஆவுடை நாயகி. நல்ல விளையாடினே தம்பி. இன்னும் பயிற்சி வேணும். ம்? அடுத்ததடவை “”முதல் பரிசு வாங்கணும்” என்று சொல்லுவார் என எதிர்பார்த்தேன். இப்படித்தான் பெரியவர்கள் நம்மைப் பயமுறுத்துவார்கள். எடுக்காவிட்டால் நாம் எப்படிக் குறுகிப் போவோம்? என்பது அவர்களுக்குப் புரியவே புரியாது.

” இன்னும் நல்லா விளையாடணும். ஓகே? உன் விளையாட்டை நீ ரசிக்கணும்” வியந்தேன். யார் இவர்?”என் தம்பி கார்த்திக் மதுரை அணி. இப்ப ஆட்டம் இருக்கு. அப்புறம் பார்க்கலாம்” சென்றுவிட்டார்.

எனக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு அவர் மேல். ஒரு மரியாதையுடன் ஒரு வெம்மை இருந்தது அவர் சொற்களில். உசுப்பேத்தி பயப்படுத்தும் ரகமல்ல இவர்…அவர் தம்பி விளையாடுவதைப் பார்த்தேன். அவனும் என்னைப் போல்தான் மர ராக்கெட் வைத்திருந்தான். ஆனால் வென்றான். அடுத்த ரவுண்டில் பரிதாபமாகத் தோற்றான்.

ஆவுடை என்னை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். “வாங்கடா, எதாச்சும் சூடா குடிப்போம்” அவரே காபி வாங்கித் தந்தார். மனதில் அரித்துக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டேன்.

சிரித்தார் ” உடனே முதல் பரிசு என்றெல்லாம் இலக்கு வைக்கக் கூடாது. ஏன்… வெறியேற்றும் இலக்கே வைக்கக் கூடாது. அடுத்த பந்து இன்னும் நல்லா அடிக்கணும். எதிராளியை ஓட வைக்கணும். நானும் அரும்பாடுபட்டு பந்து எடுக்கணும். இது விளையாட்டுடா தம்பி. டென்ஷனாகக் கூடாது.” நிறுத்தினார் ” ஏன்? வாழ்க்கையே இப்படித்தான். ஒவ்வொரு படியையும் ரசிச்சுக் கடக்கணும். ”

85ல் மதுரையில் ஒரு கல்லூரி இருநாள் கருத்தரங்க்கு நிகழ்ச்சிக்குச் சென்றதில் மீண்டும் அறிமுகமானார் ஆவுடைநாயகி அக்கா. நான் இளநிலை முதல்வருட இறுதி . அவர் முதுநிலையில் கடைசி வருடம். ஆவுடை நெடுநெடுவென ஒல்லியாக இருப்பார். கருநிறம். பளிச்சிடும் கண்கள். பார்த்தால் , ஜொள்ளூ விடத் தோன்றாது. வணக்கம் சொல்லி, ஹலோ என நட்பாகத் தூண்டும் வடிவம்.

இரு தூத்துகுடிப் பயல்கள் இரு பெண்கள் என அவரிடம் அறிமுகமானோம். முதல்நாள் வினாடிவினாவில் நாங்கள் பதில் சொன்னதுக்கு அரங்கில் கைதட்டியது முதலில் அவர்தான். அதன்பின்னே, மதுரைப் பார்வையாளர்கள் , பிறருக்கும் கைதட்டினால் தப்பில்லை என்று மெல்ல கை தட்டினார்கள்.

ஒரு ரவுண்ட் முடிந்ததும், ஓட்டமாக அவரிடம் சென்று அருகில் நின்று ஈ என இளித்தோம். அவர் எங்கள் தலைமுடியை சிலுப்பி விட்டு, ‘ குட். நல்ல Performance. கேள்வியை எஞ்சாய் பண்றீங்க. அதுதான் உங்க பலம். அடிச்சு விளையாடுங்கடா,தம்பிகளா!” என்றார். புது உற்சாகம். பதில் சொல்லிவிட்டு குவிஸ் மாஸ்டரை விட அவர் ரியாக்ஷனைத்தான் பார்த்திருந்தோம். ஜெயிக்கவில்லை. அவருடன் டின்னர் சாப்பிடச் சென்றுவிட்டு, ஒரு பாப்பின்ஸ் உருளை வாங்கி அவருடன் பகிர்ந்தோம். சிரித்தார்.

அதன்பின் தபால் கார்டுகளில் அவருடன் தொடர்பு. ” கெமிஸ்ட்ரி ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த ஈக்வேஷங்களை கண்டுபிடித்தவனைக் காயடித்துக் கொல்லவேண்டும் , கெட்ட வார்த்தைக்கு மன்னிக்கவும்” என்று எழுதியதற்கு ” Try to enjoy what you study. You will learn. Once you learn , you would enjoy expressing it out. One expression is your exam” என்று இன்லேண்டில் பதில் வந்தது.

சிறுசிறு வெற்றிகளையெல்லாம் போஸ்ட் கார்டில் எழுதுவோம். அவரிடமிருந்து தவறாமல் பாராட்டி பதில் வரும். அதோடு, என்ன செய்யவேண்டும்? என்றும் எழுதுவார் ” Celebrate small victories, my little brothers!” என்பார் இறுதி வரிகளில்.

கொஞ்சம் கொஞ்சமாக கடிதங்கள் நின்றன. அதன்பின் அவருடன் யாருக்கும் தொடர்பில்லை.

வீரராகவன் போனமாதம் வாட்ஸப்பில் மீண்டும் தொடர்பு கொண்டான் ” டே, இவனே… அவங்க ஹைதராபாத் போயிட்டாங்க. பையன் அங்க இருக்கானாம்.”வீரராகவன் தானே அழைத்தான்.

” எழுத வேண்டாம்னு பாத்தேன். அவங்க வாழ்க்கை ரொம்ப சோகமாப் போயிருக்குடா. அவங்க தம்பி நம்ம வயசு, பைக் ஆக்ஸிடெண்ட்ல கால் விளங்காமப் போயி… நாம காலேஜ் படிச்சிட்டிருக்கும்போது, அவன் கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சிருக்கான். அவங்க ரொம்ப வருஷம் கலியாணம் செஞ்சுக்காம இந்தூர்ல ஒரு ஸ்கூல்ல வேலை பாத்திருக்காங்க. அப்புறம் ஹஸ்பண்டு ரெண்டு வருஷமுன்பு கான்ஸர்ல போயிட்டாரு. இப்ப பையன் கூட.”

உறைந்திருந்தேன்.”ஆவங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு சொல்றா. “அந்த ஆண்ட்டி, நாங்க என்ன நல்லது செஞ்சாலும் பாராட்டுவாங்க. எனக்கு என் அம்மாவைவிட அவங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்” அழுதுருச்சு. அவங்க நம்பர் கேட்டிருக்கேன். கிடைச்சாத் தர்றேன்னு சொல்லியிருக்கா”

” You know what, Veera?” என்றேன். ” அவங்க நம்பர் கிடைச்சா அதுதான் வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சி. கொண்டாட வேண்டிய ஒரு தருணம்” ” சந்தேகமே இல்லாம” என்றான், செருமியபடி. அழறானோ? நான் கேட்கவில்லை. அவனும் என்னைக் கேட்கவில்லை.

அழுவது ஆவுடையக்காவுக்குப் பிடிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *