தாயுமானவள்

செல்ஃபோனை வீட்டில் விட்டுச் சென்றிருந்தேன். பார்த்தால் 4 தவறிய அழைப்புகள். இரண்டு பால விநாயகம் அண்ணனிடமிருந்து.  மற்ற ரெண்டு தெரியவில்லை. புது எண்.

“ தம்பியை உன்னிடம் பேசச்சொன்னேன். அவன் கூப்பிட்டிருப்பானே?” என்றார் பாலா அண்ணன். “ கொஞ்ச நாளாவே கிறுக்கு பிடிச்சு அலையறான். எனக்கும் அவனுக்கும் சண்டை வந்து, அம்மா, உன்னைப் பேசச்சொன்னாங்க. என்னன்னு கேளு” என்றார் கோபமும் விரக்தியுமாக.

 “சும்மா பேசு. அதான் அம்மா சொல்லிட்டாங்கள்ல?” என்ற பாலா அண்ணனின் சொற்கள் உறுதி தரவில்லை. தயக்கத்துடன் புது எண்ணை அழைத்தேன். பால முருகன்,  பாலா அண்ணனின் தம்பிதான்…

“ஓண்ணுமில்லண்ணா. ஊருக்குப் போன என் மனைவிக்கு திடீர்னு வைரல் காய்ச்சல். கொரோனா இல்ல.  வீட்டுல வைச்சிருக்காங்க. இங்க என் மகள் அம்மா இல்லாம ரொம்ப டென்ஷனாயிட்டா. எனக்கு ஆயிரம் பிரச்சனை. இதுல இது படிக்கமாட்டேங்குது. ஆன்லைன் க்ளாஸ்ல வெறிச்சுப் பாத்துகிட்டு இருக்குன்னு டீச்சர் சொல்றாங்க.”

“இதுதானா? கொஞ்சம் சிரிச்சுப் பேசிப்பாருங்க. வீட்டுல அடைஞ்ச்சு கிடக்கிற பிள்ளைகளுக்கு மன அழுத்தம் வரும். அதுவும் அம்மா இல்ல பக்கத்துலன்னா…”


“எல்லாம் செஞ்சாச்சு. எனக்கும் ஒரு லிமிட் இருக்குல்லண்ணா? அதோட, என் மாமியார் இங்கதான் இருக்காங்க. நான் எரிஞ்சு விழறேன்னு என் அம்மாகிட்ட புகார். பாலா அண்ணன் தவறான நேரத்துல போன் பண்ணப் போய், நான் அவர்கிட்ட சூடாப் பேசி, சண்டை வந்திருச்சி. இப்ப நீங்க…”

அவரது குரலில் இயலாமையை உணர்ந்தேன். இந்த இயலாமை, பயம் எரிச்சலாகி , வார்த்தைகளாக வெடித்து… மகள் மன அழுத்தத்தில். இவரை விட அப்பெண் முக்கியம் முதலில்.

“ஸரிகா இருக்காளா?” என்றேன்.

“ம். கூப்பிடறேன். “ என்றவர் அழைப்பதும் ,அப்பெண் மவுனமாக காமிரா முன் அமர்வதும் உணர்ந்தேன்.

“ஹலோ! எப்படியிருக்கம்மா?! ரெண்டு வருஷமாச்சு உன்னைப் பாத்து”

“ம்” என்றாள் சுரத்தில்லாமல்.

“சமீபத்துல எந்த மாங்கா நாவல் படிச்சே?”  அவள் ஜப்பானிய கார்ட்டூன் நாவல்கள் வாசிப்பதை விரும்புவாள் என  பாலா அண்ணன் சொல்லியிருந்தார்.

“இல்ல.” ஒரு வரி.

“ ஏன் மா? “

“படிக்க நிறைய இருக்கு”

“ஆ! அது இருக்கும் எப்பவும். நாம கதை படிக்கறதை விடக்கூடாது. எனக்கு அதுல ஒரு கதை சொல்லுவியா?”

அவள் புன்னகைத்தாள் “ அங்கிள். சும்மா கேக்கறீங்க. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது”

“யார் சொன்னா? எனக்கு பிடிக்கும். அடுத்த வாரம் ஒரு கதை சொல்லு என்ன?”

“ஓகே பை”

அவள் வைக்குமுன் அவசரமாக “ அம்மா எப்படி இருக்காம்மா?” என்றேன்.

சட்டென அவள் முகம் மாறியது “ இருக்கா”

“நீ அடிக்கடி அவங்க கிட்ட பேசணும் என்ன? சாதாரண வைரல் …”

சட்டென அவள் கேவும் ஒலி கேட்டது “ அப்பா is very cruel. He is not allowing me to talk to her”

அடுத்த லைனில் இருந்த முருகன் பதறினார் “ ஏய்! நான் எங்க பேசக்கூடாதுன்னு சொன்னேன்? அன்னிக்கு அவ டயர்டா இருந்தா…”

“முருகன். நீங்க லைனில் இருக்க வேண்டாம்” என்றேன் திடமாக.

அவர் முணுமுணுத்து நகர்ந்தார்.

“நீ பேசினாத்தான் உன் அம்மா சரியாவாங்க. எப்படி அம்மா பக்கத்துல இருந்தா உனக்கு ஒரு உற்சாகம் வருமோ அது மாதிரி அவங்களுக்கும்..”


“ என் அம்மாவைப் பாக்கணும். அவங்க இருந்தாத்தான் எனக்கு படிக்க வரும். பயமா இருக்கு”

“என்ன பயம்? அப்பா இருக்கார், பாட்டி இருக்கா”

“இல்ல. அம்மா … I can feel you know.? I can smell her presence; I can touch her. That makes me feel comfy”

சற்று அமைதியாக இருந்தேன்.

“எனக்கும் இப்படித்தான் சரிகா. நான் உன் வயசுல இருக்கச்சே, அம்மா பூஜை முடித்து வரும்போது, அவள் பூசிக்குளித்த வாசனை ம்ஞ்சள் கம்-நு மணம் வீசும். அவ புடவை ஸாஃப்டா, மொரமொரன்னு இல்லாம நைஸா இருக்கும். I can understand what you say”

“நோ அங்க்கிள் “ என்று அழுகையில் வெடித்தாள் “ எங்கம்மா , யூ நோ, she shines! When I touch her hands softly, it would be … it would be like a soft gold, yellow mirror”

“அவங்க பக்கத்துல இருந்துதான் படிப்பியா?”


“ஆமா” என்று தலையசைத்தாள்.  “ I want my mom”

முருகன் மீண்டும் வந்தார் “ அதான் அவ காய்ச்சல்ல கிடக்கறதப் பாத்தேல்ல? இன்னும் என்ன அழுகை?”

“முருகன். ப்ளீஸ் பேசாம இருங்க” என்று இரு முறை சொல்லி அடக்கினேன்.

“ ஸோ, ஸரிகா, உங்கம்மா இருந்தா உனக்கு எல்லாம் சரியாயிரும். நீ படிப்பே, தைரியமா பதில் சொல்லுவ, எழுதுவே, சரியா சாப்பிடுவே, இல்லையா?”

“யெஸ்:

“அம்மா இருந்தா ஒரு தடங்கலும் இல்ல, No Challenge right?”

“ யெஸ்” கண்களை துடைத்துக் கொண்டது அப்பெண்.

“ இது எல்லாருக்கும்  அந்த காலத்துலேர்ந்தே இருக்கு. ஒரு பெரிய ஆள் இதுக்கு ஒரு பாட்டே எழுதியிருக்காரு . எல்லாம் சொல்லிக்கொடுத்த என் அம்மா, தகதகன்னு தங்கம், கண்ணாடி மாதிரி மின்னுவா, அவ  என் நெஞ்சுக்குள்ளயே இருப்பா. அவ இருக்கறதுனால , எனக்கு ஒரு சங்கடமும் வரவே வராது”

“நீங்க சும்மா எழுதியிருப்பீங்க” விசும்பலோடு சொன்னாள்.

“இல்ல. ராமாயணம் எழுதினார் ஒருத்தர். கம்பர்னு பெயர். ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி அவர்”

“தெரியும். பெரியப்பா அந்தப் பெயர் சொல்லுவார். He wrote huge volumes. Bigger than Harry Potter”

சிரித்தேன். “ஆமா, அவர் எப்பவும் அவர்கூட இருக்கிற ஒரு அம்மாவை நினைச்சு எழுதியிருக்கார். உன் அம்மா மாதிரியே”

“ஹஹ்?”

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள் என்னுள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.”

ஒரு கண்ணாடி போல் மின்னும் என் அம்மா, என்னுள்ளத்திளேயே இருப்பாள். அவள் எனக்கு எல்லாவற்றையும் கற்பிக்கிறாள். அவள் இருக்கும்போது இங்கே ஒரு துன்பமும் வராது”

தொடர்ந்தேன் “ பாத்தியா? உன்னை மாதிரியேதான் பெரியவங்களும் கேக்கறாங்க. படிக்கறதுக்கு, எல்லாருக்கும் அம்மா பக்கத்துல வேணும். அப்படி எந்த அம்மா இருக்க முடியும்?”

“யாரு?”

“ஸரஸ்வதி தாயார். அவள்  உன்  அம்மா மாதிரியே பக்கத்துல எப்பவும் இருக்கறதா நினைச்சுக்க. அம்மாவைத் தொடணும்னு தோணிச்சின்னா, அவ படத்தைத் தொடு. அவள் அனைவருக்கும் தாயுமானவள்”

மூக்கை உறிஞ்சும் ஒலி கேட்டது.

“ஏன் பாட்டி, அப்பா badன்னு சொன்னா? அப்பா நிஜமாவே கெட்டவரா?”

நிதானித்தேன் . சில வேளைகளில், பெரியவர்கள் சிறுவர்களை விடத் தவறாகப் பேசிவிடுகிறார்கள்.

“நீ யார் சொன்னா கேப்பே? கடவுள் மாரி இருக்கற அம்மா சொன்னா கேப்பியா, பாட்டி சொன்னா கேப்பியா?”

“அம்மா”

அப்ப அம்மாகிட்ட கேளு. அப்பா கெட்டவரா?ன்னு “

“கேட்டேன் அங்கிள். அம்மா, ‘அப்பா நல்லவர். அவரை தொந்தரவு பண்ணாதேன்னு சொன்னாங்க’.”

ஒரு ஆணினுடைய விசும்பல் சன்னலாகக் கேட்டது.

அந்தப் பாட்டை உனக்கு அனுப்பறேன்  தினமும் சொல்லுவியா?” என்றபடி அப்பாடலை தமிங்க்கிளீஷில் டைப் செய்யத் தொடங்க்கினேன்.

“ஓகே அங்க்கிள். எனக்கு ஹோம் வொர்க் இருக்கு. பை” டக் என எழுந்து சென்றுவிட்டது அப்பெண்.

கலங்கிய கண்ணுடன் விகாரமாக காமிராவில் வந்தார் பாலமுருகன். “ நீங்க சொன்னதை அவ நம்புவான்னு நீங்க  நம்பறீங்களா?” என்றார்

“குழந்தைகளின் பெரிய வரம் என்ன தெரியுமா முருகன்? நம்பிக்கை. எதையும் நாம் நம்பும் விதத்தில் சொன்னால் நம்புவார்கள். அது அவர்களின் மிகப்பெரிய பலம், பலவீனமும் அதுவேதான்.

ஜப்பானில் ஒரு கோவிலில் பொம்மைகளை வைப்பார்கள். குழந்தைகள் ஒரு பொம்மையை மிக ஆழமாக நேசித்தால், அந்த பொம்மைகள் உயிர்பெற்றுவிடும் என நம்புகிறார்கள். விவேகானந்தர் இதனை “ ஓ! அதிர்ஷ்டசாலிகளே!” என்று வியக்கிறார்.

முதலில் நாம் அவர்களை நம்பவேண்டும். அவர்கள் பண்பை, அறிவை, முயற்சியை, அன்பை நாம் நம்பினால், அவர்கள் தன்னை நம்பத் தொடங்குவார்கள். முதலில் உங்கள் ஸரிகாவை நம்புங்கள்”

ஸரஸ்வதி அந்தாதியின் முதல் காப்புப் பாடலை அவருக்கு வாட்ஸப் செய்துவிட்டு ஜன்னலின் வழியே வெளியே பார்த்தேன். மூடிக்கிடந்த வானம் மெல்ல வெறிக்க, மேகங்களூடே சூரிய ஒளி கீற்று எதிர் கட்டிடத்தின் ஜன்னலில் ப்ரதிபலித்து, என் அறையை வெள்ளொளியால் நிறைத்திருந்தது.

Leave a Reply