எப்போது ரங்கம்மாள் ,கோபாலயங்கார் வீட்டில் வந்தாள் என எவருக்கும் தெரியவில்லை. கோபாலய்யங்கார் பக்கவாதத்தில் படுத்ததும், முதுகு வளைந்து போன அவரது மனைவி ராஜம், தன்னால் வீட்டையும் பார்த்துக்கொண்டு அவரையும் பார்க்க முடியாதென்று,  அவருக்குப் பணிவிடை செய்ய அவரது ஒன்றுவிட்ட அத்தையின் மகளை திருக்குறுங்குடியில் இருந்து அழைத்து வந்தாள்  என்றும், பிரம்மதேசம் கிராமத்தில் வசித்த அவரது ஒன்றுவிட்ட அக்காவின் மகள் அவள் என்றும், அக்கா இறந்ததும், அவள் இங்கு வந்துவிட்டாள் என்றும் பல கதைகள் உண்டு.

எல்லாருக்கும் அறிந்த ஒன்று, அவளது பராமரிப்பால், கோபாலன் எழுந்து அமர்ந்து, தனது வேலைகளைத் தாமே செய்யுமளவுக்கு குணமடைந்தார் என்பது. அத்தோடு, இருவருக்கும் வரும் வாக்குவாதங்கள் தெருவுக்கே தெரியும்.

“ போடா பைத்தியாரா. உன்னை அப்படியே பாயோட விட்டிருக்கணும். உனக்குன்னு மெனக்கெட்டு வந்து செய்யறேன் பாரு, என்னைச் சொல்லணும்” என்பாள் கீச்சுக் குரலில், அதுவும் தெருவில் நின்று.

கோபாலன், தடுமாறி வேட்டியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, வாசக்கதவில் சாய்ந்தவாறே “ ந்ன்ன்ன்நீ…. ப்ப்ப்ப்போ” என்று கையைக் காட்டுவதை எதிர்வீட்டில் சீமாச்சு கழுத்தில் கைவிரலால் அழுக்கெடுத்தபடியே சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருப்பார். அவர்தான் கோபாலன் வீட்டுக்கதைகளை ஓரளவு என்னிடமும் சொன்னார்.

ராஜம் இதிலெல்லாம் தலையிடமாட்டாள். சண்டை நடந்த ஐந்தாவது நிமிடத்தில் , கோபாலனை , ரேழி பெஞ்சில் படுக்க வைத்து, காலில் சூடாக எண்ணெயைத் தடவி உருவி விடுவதும் ரங்கம்தான்.  “எரியறதாடா கோபாலா? நன்னாத்தான் கொடுத்திருக்கான் பண்டாரவளை வைத்தியன். பாரு, நோக்கு சொரணை வந்துடுத்தே, வலது கால்ல?! “ என்பாள் காலில் அழுந்தக் கிள்ளியபடி. அவரும் , அவள் சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பார்.

மெல்ல மெல்ல கிராமத்துக் குடும்பங்கள்  பாளையங்கோட்டை, நெல்லை என சிறு நகரங்கள் நோக்கிப் பெயர்ந்ததில், கோபாலனின் குடும்பமும் உண்டு. பாளை ஊசி கோபுரம் அருகில் ஒரு வீட்டில் ஐந்து பேர் அடைந்தபடி வாழ்ந்தனர். “ பெரியவனுக்கு ஜான்ஸ்ல இடம் கிடைச்சது. சின்னவனுக்கு சேவியர்ஸ்ல.  என்ன பண்றது? இங்க வந்துதானே ஆகணும்?”  ராஜம் ,தனது அப்பா கொடுக்கும் பணத்தில் வீட்டு வாடகை, வீட்டு மளிகை எனச் சமாளிக்க, ரங்கம், வாய்க்காப் பாலம் தாண்டி சில வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து வருமானம் கொண்டு வந்தாள் . ராஜத்துக்கு அதில் விருப்பமில்லை.

‘என்னடி பாக்கறை? ஆத்துல பாத்திரம் தேய்க்கற மாரி பிறத்தியாராத்துல தேய்ச்சுட்டுப் போறேன். சிலவா, தளிகை பண்ணிக் கொடுங்கறா. அங்கயே குளிச்சுட்டு,  மடியா சமைச்சுக் கொடுத்துட்டு வர்றேன். மாசம் அம்பது ரூபாய்னா, அம்பது ரூபாயாச்சே? கொளந்தேளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட உதவும்லியோ? நான் எப்படி இருந்தா என்ன? கொளந்தேள், நீ, கோபாலன் நன்னா இருக்கணும்.”

பையன்கள் ஊரிலிருந்த மதமாற்றத்தைத் தாண்டிப் படித்தனர், மதுரையில் பிரபல கல்லூரி தலைமையாசிரியர் நடேச முதலியார் எழுதிக்கொடுத்த ,சிபாரிசு கடிதம் கொண்டு , பெரியவன் திருமலை, அண்ணாமலை யூனிவர்ஸிட்டியில் பொறியியல் படித்தான். அரசு சார்ந்த ஒரு பொறியியல் கம்பெனியில் சேர்ந்து , வெளிநாடு சென்று சிறு பொருள் ஈட்டினான். சின்னவன் அரவிந்தனை  மருத்துவம் படிக்க வைத்தான். கோபாலன் , ரங்கத்தின் பணிவிடையினால் அதிகம் மோசமாகாமல்  இருந்தார்.

சென்னையில் அரவிந்தன் வீடு கட்டியபோது, வாசலுக்கு அருகில் ஒரு அறையில் கோபாலன் வைக்கப்பட்டார். ரங்கம் மட்டும் அங்கு அவருக்கு பணிவிடை செய்யச் சென்று வருவாள். அவர் மறைந்தபின் ராஜம்  நரம்புத் தளர்ச்சியில் அதிகம் பேசாமல், ஒரு பொம்மை போல் நடமாடி வந்தாள். திருமலை ஐதராபாத்தில் செட்டில் ஆகியிருந்தார்.

அரவிந்தனின் மகள் , ஸ்ரீஜா மேற்படிப்பு படிக்கச் செல்வதாக ஒரு நாள் வீட்டில் பேச்சு தொடங்க, ரங்கம் இடை புகுந்தாள் “ அதான் படிச்சாச்சேடி. என்னமோ டெல்லி பக்கம் போனியே? அதென்ன ஜுலுஜுலுவா? பேரே நன்னால்லை”

“பாட்டி! அது பிட்ஸ் பிலானி!. ஜுஞ்ஜூனு பக்கம் . ஜுலு ஜுலு வாம்!” எல்லாரும் சிரிக்க , ரங்கம் தொடர்ந்தாள் “ சரிடி. என்னமோ , திருநகரி, அழகர் மலை, வானமாமலை, குறுங்குடின்னு பேர் இருந்தா , வாய் நிறைய நன்னாச் சொல்லலாம். ஊரையும் பேரையும் பாரு. இன்னும் என்ன படிப்பு? கலியாணம் பண்ணிண்டு காலாகாலத்துல ஒரு பிள்ளையைப் பெத்துக்கோ”

“பாட்டி” சினந்தாள் ஸ்ரீஜா “ நான் இப்ப கலியாணம் பண்ணிக்கலை. இப்ப கெல்லாக்ஸ் பிஸினஸ் ஸ்கூல்ல போய்ப் படிக்கணும்”

“என்னடிது? காலேஜ்ல படிச்சிட்டு, ஸ்கூலுக்குப் போறேங்க்கறது இது? அரவிந்தா, சொல்ல மாட்டியா இதுகிட்ட? டீ, இவளே, ஒம்பெண்ணை என்னமாத்தான் வளத்திருக்காய்? “ 

அரவிந்தனின் மனைவி டாக்டர் செளம்யா மெல்லச் சிரித்தாள்  “ அத்தை, அது பெரிய காலேஜ். பேர் சும்மா ஸ்கூல்னு சொல்லுவா”

“இதுநாள் வரை டெல்லிப்பக்கம்னு இருந்தது, சரி. ஆத்திரம் அவசரம்னா போய்ப் பாக்கலாம். இந்த ஸ்கூல் எங்க இருக்கு. கல்கத்தாவா?”

ஸ்ரீஜா பாட்டியின் அருகே அமர்ந்து தோளில் கையைப் போட்டாள் “ பாட்டி. இது அமெரிக்காவுல இருக்கு. உனக்கு மதுரை, திருனெல்வேலி இதுதான் தெரியும். விடு”

சட்டென ரங்கத்தின் முகம் மாறியது “ எனக்கு அறிவில்லைன்னு சொல்றாய்? சரி”

“ஸாரி பாட்டி. அப்படியில்லை. உனக்கு இதெல்லாம் புரிஞ்சிக்க முடியாது. ரொம்ப தூரம் அது. படிக்க ரெண்டு வருஷமாகும். அதுக்கப்புறம் வேலை கிடைச்சு… அப்புறம் கலியாணம்”

“என்னமோ போ. சொல்லணும்னு தோணித்து… சொல்றேன். வளர்ந்துடுத்து. காலாகாலத்துல கலியாணம் பண்ணி வை” ரங்கம் சட்டென உள்ளே நகர்ந்தாள்.  ஆயாசமாக நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜத்தின் உதடு, கோணலாக வெட்டியது. செளம்யாவுக்கு, அது கவலையுள்ள உணர்வு என்பது காலத்தில் அனுபவத்தில் புரிந்திருந்தது.

“ஸ்ரீஜாவுக்கு நல்ல வரன் வந்திருக்கு பாட்டி” என்றாள் செளம்யா, இருவருடங்களின் பின்  ஒருநாள். ‘இன்னிக்கு பையனாத்துலர்ந்து பேச வர்றா.”

ராஜத்தை ஒருங்க வைத்து, தானும் ஒரு அரக்குப் புடவையைக் கட்டிக்கொண்டு ரங்கம் தயாராகி இருந்தாள். வந்தவர்கள் பெரியவர்களை வணங்கினார்கள். தட்டு மாற்றிக்கொள்ளுமுன் , பையனின் தாத்தா “ பொண்ணு எந்தூர்ல இருக்கா?” என்றார் பிசிறடிட்த்த குரலில்.

“கனெக்டிகட் ” என்று அவர் காதில் சத்தமாக பையனின் அப்பா சொன்னார். “ ஆங்க்” என்றார் அவர் தலையசைத்து. “ இவன் சான் டியாகோ இல்லையா?”

“ஆமா, கலியாணத்துக்கு அப்புறம் யாராவது மாத்திண்டு போணும். இல்லைன்னா மாசாமாசம் ப்ளைட் பிடிச்சு..”

ரங்கம் இடை வெட்டினாள் “ ரெண்டு பேருக்கும்  நாலு மணிநேரம் பறக்கணுமில்லையோ? “

ஆச்சரியத்துடன் அரவிந்தன் பார்க்க ரங்கம் தொடர்ந்தாள் “ மதுரைல வாக்கப்பட்டு, நாங்குனேரியில பொண் இருக்கற மாதிரி. மாசாமாசம் வந்து ஒரு நாள் பாத்துப்பா, சேர்ந்துப்பா. இது பேர் கலியாணமா?”

அரவிந்தன் முகம் சிவந்தார். அவர் எதுவும் சொல்லுமுன், பையனின் தாத்தா தொடர்ந்தார் “ மாமி சொல்றது சரியாப் படறது. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்குன்னா, நிச்சயம் பண்ணிப்போம். ஆனா, ரெண்டுபேரும் சேர்ந்து இருக்கற மாதிரி வந்தப்புறம்தான் கலியாணம்னு வைச்சிக்கலாம். பெரியவா, சரியாத்தான் சொல்றா” தாத்தா கை கூப்பினார்.  விடை பெற்று எழுந்து போயினர்.

ரங்கம் , ராஜத்தின் அருகே நாற்காலியில் அமர்ந்திருக்க “ கெடுத்திட்டியே அத்தை! உனக்கு கலியாணம் ஆகலைன்னு பொறாமையா?” என்றார் அரவிந்தன் கோபமாக.

“டேய்” ரங்கம் எழுந்தாள். உணர்ச்சியில் அவள் உடல் ஆடியது “ இந்தப்பொண்ணு எந்த ஊர்ல இருக்கா?ன்னு  தெரிஞ்சிக்க , சின்னவன்கிட்ட கேட்டு மேப் பாத்துக்கக் கத்துண்டேன். மனசெல்லாம் அந்தக் குழந்தை மேல இருக்கு.

இந்த உடம்பு இருக்கே, அரவிந்தா, அது  பல அக்னிகளால ஆகி வளர்றது. உணவு செரிமானம் ஒரு அக்னி.  படிக்கணும்னு ஆர்வம் வர்றது ஒரு அக்னி. ஒவ்வொரு அக்னியையும் சாந்தப்படுத்தணும். வயித்துல இருக்கிற அக்னிக்கு சாதம், அறிவுத் தீக்கு, படிப்பு…

அதே மாதிரி காமாக்னி-ந்னு ஒண்ணு. இந்த முதலிரவுங்கறாளே, அது பெரிய யாகம் தெரியுமோ. காமாக்னில தவிக்கிற ரெண்டு உடம்புக்கு, மனசுக்கு  சாந்தி பண்றது. அதுதான் சாந்தி முகூர்த்தம்னு பேர். வெறும் உடல் சேர்க்கை இல்லை. உடல் மனசு எல்லாம்.

இந்த ரெண்டுத்துக்கும் இப்ப அந்த அக்னி மறைஞ்சு இருக்கு. கலியாணம்னு பண்ணி காமக்னியைத் தூண்டி விட்டு, அப்புறம் அதுக்கு வழியில்லாம பண்ணினா, தீ என்ன பண்ணும்?. எங்க பஞ்சு இருக்கோ, அங்க பத்திக்கும். அனாவசியமா ரெண்டு பேரோட மனசு, உடம்பு  ஒழுங்குக்கு பாதகம் பண்ணாதீங்கோ”

ராஜத்தின் கை , வெட்டி வெட்டி,ரங்க்கத்தின் இடது கை விரல்களைப் பற்றியது.

“டீ ராஜம்” என்றாள் ரங்கம் “ எனக்கு அப்படி ஒரு அக்னி இருக்கறதை வளரவே விடாம பண்ணினேன். எதுக்கு? கோபாலன் நன்னாகணும். எல்லாரும் சுபிக்ஷமா இருக்கணும். உடல் வேலை செஞ்சு மனசை கட்டுப்படுத்தினேன். தனியாப் படுத்து தூக்கம் வராம இருக்கறப்போ, அந்த அக்னி மெல்ல மெல்ல வரும்பாரு… நரகம்.

இது என்னோட போட்டும் அரவிந்தா. அந்தக் குழந்தேளுக்கு பசியைத் தூண்டி, அக்னியை வளரவிட்டு, அந்த யாகத்துக்கு ஹவிஸ் கொடுக்காம வைக்காதே. அது மகா பாவம்”

ராஜத்தின் கண்களும், வாயும் பலவாறாக வெட்டி இழுத்தன.

அடுத்த நாள் காலை ரங்கம் அமைதியாக இறந்திருந்தாள். பெரிய மாரடைப்பு என்றார் அரவிந்தன்.

பதினாறாம் நாள் சடங்கு முடிந்து, வீட்டில் விளக்கேற்றுகையில், பூஜையறையில் இருந்த பலஅடுக்கு விளக்கில் அனைத்து அடுக்குகளின் முகங்களிலும் திரியிட்டு ஏற்ற வைத்தாள் ராஜம்.

“எவ்வளவு முகம்மா, இந்த விளக்குல?!” என்று செளம்யா வியந்ததற்கு, ராஜம் ஒரு விரலை உயர்த்தினாள்.  

12 thoughts on “ரங்கம்மாள்

  1. ரங்கத்தின் அந்த கடைசி வார்த்தைகள் பொளேர் என அறைந்த மாதிரி.. அற்புதம் சுதா! வாழ்த்துக்கள் 👏👏👏

  2. I am searching this type of Athai for the youngsters to advise. உண்மை சுடும்

  3. அண்ணா, வார்த்தையே இல்லை. காய் கூப்ப மட்டுமே தோணுது

  4. நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கைம்பெண்ணாக ஊரோடு வந்த என் பாட்டிக்கு நாத்தனாராக அடைக்கலம் கொடுத்து என் அம்மாவின் கல்யாணச் செலவுகளைப் பிற்காலத்தில் ஏற்று என்மீதும் விசேஷ அன்பைப்பொழிந்த பெருந்தேவிப்பாட்டி சதா சர்வகாலமும் கடுவன் பூனையாகவே இருந்ததன் காரணமும் இதுவாகவே இருக்கலாம். சாந்தி முஹூர்த்தமே நடக்காமல் இளம் விதவையானவள். அக்காலத்துக்குரிய கைம்பெண் கோலம் பூண்டு ஆசார அனுஷ்டானமே தன் வாழ்க்கையாக 80 வயதுக்கு மேல் வாழ்ந்தவள் என் பிரிய அத்தனைப் பாட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *