அவசரமாய்ச் சென்று மொபைலை எடுக்குமுன் அழைப்பு நின்றுவிட்டிருந்தது. “எருமை” என்று பெயர் மிஸ்டு கால் லிஸ்ட்டில் தெரிந்ததில் ஒரு புன்னகையுடன் அழைத்தார் ரமேஷ்.

“லே, எங்கிட்டுப் போயிட்ட?” என்றார் தாமஸ் மறுபுறம். “ செத்திட்டியா,மூதி! நேத்துலேர்ந்து கால் போட்டிட்டிருக்கேன்”

“ஸாரி மக்கா” என்றார் ரமேஷ் “ நானே காலேல கூப்பிடமுன்னு இருந்தேன். மறதி அதிகமாயிட்டிருக்கடே.”

“எல்லாருக்கும் அம்பத்து நாலு தாண்டிட்டு. காலேஜ்ல இருந்தமாரியா இப்ப இருக்க முடியுது? சரி, விசயத்தச் சொல்லிடுதேன். இந்த மகாலிங்கம் வர்றான் இங்கிட்டு. ஒரு மாசம் எங்கூடத்தான் இருப்பான்”

வியந்தார் ரமேஷ் “ அந்த நாய்க்கு உன் வீட்டுல என்னல வேலை? வி.ஆர்.எஸ் வாங்க்கினதுக்கு அப்புறம் பொழுது போகலியோ அதுக்கு?”

மறுபுறம் தாமஸ் சிரிப்பது கேட்டது “ பொட்டைக் கண்ணு நாய்னுல்ல சொல்லுவம் நாம? பி.கே நாய்… டி.ஜி.எம் ஆக இருந்து வி.ஆர்.எஸ் வாங்கியிருக்குல! பெரிய பெயர் அவனுக்கு, கவர்மெண்ட்ல. பிரிவு உபசார விழாவுக்கு நாம் போயிருந்தம்லா? அவனப் பத்திக் கேக்க கேக்க ஒரே பெருமையா இருந்துச்சு மக்கா.”

ரமேஷுக்கும் பெருமை பொங்கியது “ பாசக்காரப் பய. சரி, எதுக்கு வர்றான்?”

தாமஸ் குரல் தாழ்ந்தது “ சொல்லிறாத யாருகிட்டயும். சரவணன் போனமாசம் போனான் பாரு. அதுலேர்ந்து இவனுக்கு ஒருமாரி ஆயிட்டு. டிப்ரெஷன்  மாரி. என்கிட்ட போன்ல பேசறப்ப அழுதுட்டான். ‘மக்கா, உன்கூட வந்து கொஞ்ச நாள் நிக்கேம்ல. வரட்டா?’ண்னு கேட்டான். சரின்னுட்டேன்.”

ரமெஷ் உறைந்தார். உயிர் நண்பன் சரவணன் கோவிட் ல் திடீரென மறைவான் என எவரும் நினைக்கவில்லை. கல்லூரிப் பருவத்தில், தாமஸ், மகா, சரவணன் ஒரு தனிக்குழு. பலர் நண்பர்களாக இருந்தாலும், அந்த மூவர் தனியாகச் செல்வது , சிகரெட் பிடிப்பது என்பது நண்பர்களுக்குள் அனுமதிக்கப்பட்ட ஒன்று.

தாமஸ்ஸின் வீட்டின் அருகே மூன்று மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி நிற்கும். அதுதான் அவன் வீட்டின் அடையாளமும். பெரிய பழைய மரங்கள். தாமஸின் அப்பா பதப்படுத்திய மீன் ஏற்றுமதி வியாபாரத்தில் பெரும் பணம் சம்பாதித்தவர். அதன்பின் நொடித்தும் போனார். தாமஸ் கடுமையாக உழைத்து  வழக்கறிஞரானார்.  பொலிவு மங்கிய பழைய வீடு சொத்தாகத் தங்கியது.

மகாலிங்கம் சென்னையில் தட்டச்சு பயின்று, கம்ப்யூட்டர் கற்று, எப்படியோ அரசு உத்தியோகத்தில் சேர்ந்து, வளர்ந்து போனவருஷம் வி.ஆர்.எஸ் வாங்கினார். மகன்,மகள் அமெரிக்கா சென்றுவிட, மனைவியுடன் சென்னையில் செட்டில் ஆனார். ஆன்மீகத்தில் , வைதீக மரபில் இறங்கிவிட்டாரெனக் கேள்வி.

சரவணன் இறந்தது ரமேஷையும் பெரிதாகப் பாதித்தது. ஆனால் அதிக யதார்த்தவாதியான மகாலிங்கம் எப்படி உடைந்து போனான்? என்பது விளங்கவில்லை. தாமஸ் ,இளம்வயதிலேயே அடிபட்டு வந்ததால், இறுகியிருக்கிறான்.

தாமஸ் தொடர்ந்தார், “ எம்பொண்டாட்டி  லிடியா, அவன் ஒய்ஃப்கிட்ட பேசிட்டா.அவங்களும் “சரி இவரோட ஒரே கரைச்சலா  இருக்கு. ஒரு மாறுதலுக்கு உங்க வீட்டுல ஒருமாசம் நிக்கட்டு’ன்னு சொல்லிட்டாவ. மத்தியானம் வந்திச்சு மூதி. வீட்டுல உறங்கிட்டிருக்கு.”

“நீ எங்க இருக்க இப்ப?”

“கடைத்தெருவுல. லிடியா, பாத்திரமெல்லாம் வாங்கிட்டிருக்கா. சின்ன குக்கர், வாணலி,தட்டு, டம்ளர்…  அந்த  நாய் சைவம்லா? “

ரமேஷுக்கு சற்றே பொறாமை எழுந்தது. என்னமெல்லாம் இந்தப் பயலும் அவன் மனைவியும் யோசிக்கிறார்கள்? நண்பனுக்கு  மனசு சரியாக்க தாமஸ் முயற்சி செய்வது இருக்கட்டும். லிடியாவுக்கு உயர்ந்த குணம்.

மனைவி நித்யாவிடம் ரமேஷ் சொன்னார் . அவள் வியந்து போனாள் .” என்ன ப்ரென்ட்ஷிப் இதெல்லாம்?! இந்த காலத்துல இப்படி!”

அன்று இரவு லுங்கிக்கு மாறும்போது ரமேஷுக்கு அந்த மூன்று மரங்கள் நினைவு வந்தது. அதில் ஒன்றில் கம்பளிப்பூச்சிகள் சாரை சாராயாய் வந்துவிட, தெருவாசிகள், மரத்தை வெட்டச் சொன்னார்கள். வந்து பார்த்த மரக்கடை ராமசாமி நாயக்கர் “ இது தாங்கு மரம் கேட்டியளா? இதுல எதை வெட்டினாலும், அடுத்தது எது விழும்னு தெரியாது. மண்ணெண்ணை தெளிச்சா, கம்பளிப்பூச்சி செத்துறும். மரத்த வெட்டேண்டாம்” என்று சொல்ல, மரங்கள் இன்றுவரை நிற்கின்றன. ஆட்டோக்காரர்களுக்கு ‘மூணுமரம் பங்களா” என்றால்தான் இன்றும் தெரியும்.

அடுத்த நாள் தாமஸிடமிருந்து அழைப்பு வந்தது. படபடப்புடன் உரத்த குரலில் பேசினார். ரமேஷ் அதனை நித்யாவும் கேட்க, ஸ்பீக்கர் போனில் போட்டார்

“லே மக்கா, நீ இந்த நாய்க்கு எடுத்துச் சொல்லுடே. இன்னிக்கு காலேல  சொல்லுதான் –  வெளிய சாப்பிடுவானாம். வீட்டுல லிடியாவைக் கஷ்டப்படுத்தக் கூடாதாம். செப்பையப் பேத்திருவேன்னு சொன்னேன். நீயும் திட்டினாத்தான் கேப்பான்”

மகா பேசுவது கேட்டது “ டேய், நான் இங்க வந்து இருக்கறது எதுக்கு? இவங்களுக்கு சுமையா இருக்கறதுக்கா? தனித்தனியா ரெண்டு சமையல் பண்ணுவாளாம். அதுவும் இவன் சரிங்கறான். இவனை அறைய வேண்டாமா?”

காச் மூச் என திட்டுவது கேட்டது . ரமேஷ் “ மகாலிங்கம், டே, நீ தாமஸ் வீட்டுக்கு வந்திருக்க. விருந்தாளின்னு நினைச்சேன்னா மூணே நாள்ல ஊருக்குத் திரும்பிப் போயிரு. நண்பன் வீட்டுக்கு வந்திருக்க-னு நினைச்சா, அவன் சொல்றபடி நடந்துக்க . அதுதான் மரியாதை. வெளங்கா, பி.கே.நாய்?”

தாமஸ் இடை புகுந்ந்தார்  “அப்படிப் போடுறே! எல, மகா, சொல்லிட்டேன். நான் சொல்றபடி இருக்கறதா இருந்தா இரு, இல்ல, இன்னிக்கே கிளம்பிப் போ. என்ன சொல்லுத?”

மகா ஒரு நிமிட அமைதியின் பின் சொன்னார் “சரி. ஆனா, உங்கூட எல்லா இடத்துக்கும் வருவேன். கோர்ட்டுக்கும் சரி, உன் ஆபீஸுக்கும் சரி. என்னால தனியா இருக்க முடியாது”

தாமஸ் “சரி” என்று சொல்லவேண்டியதாய் இருந்தது.

“கொஞ்சம் ஒவராச் சொல்லிட்டீங்க” என்றாள் நித்யா கோபமாக. “ அவருக்கு மன நிலை சரியில்லைன்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் கடுமையா “வெளிய போ”ன்னு சொல்றீங்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லடி. அவன் எங்க ப்ரெண்டு. அவனுக்கு நாங்க அப்படிச் சொன்னாத்தான் புரியும், உரைக்கும். “

“பெரிய போஸ்ட்ல இருந்தவர். கொஞ்சம் மரியாதையாப்பேசுங்க்க. இத்தன வருசத்துல கொஞ்சம் பழக்கம் மாறியிருக்கும். அவ்வளவுதான் சொல்லுவென்” முத்தாய்ப்பு வைத்தாள் நித்யா.

ரமேஷுக்கும் கொஞ்சம் ஓவராகப்போய் விட்டோமா? என்று தோன்றியது. சரி,மகா அழைத்தால் சொல்லிக்கொள்ளலாம்.

ஒருவாரம் ஒரு அழைப்பும் இல்லை. மகாவின் மகள் இருக்கும் ஊரில் ரமேஷின் மகன் இடம் பெயர்வதாக அறிந்தால், மகாவின் எண்ணிற்கு அழைத்தான்.  அவன் மனைவி எடுத்தார்

“அடடே! இது மகா நம்பர்னு நினைச்சிட்டேம்மா சாரி”

“அவரோடதுதான்.. ஓ.டி.பி, ஆன்லைன் பேங்க்கிங்க் எல்லாம் இதுல வர்றதுனால, ஒவ்வொருதடவைக்கும் அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு. என் போனை எடுத்துண்டு போயிருக்கார். நித்யாகிட்ட ஒரு நிமிஷம் கொடுங்கோ“

நித்யா பேசி முடித்ததும் “ ஆமா, தாமஸுக்கு என்ன? இவங்க “தாமஸ்கிட்ட நீங்க பேசினீங்களா? எப்படியிருக்கார்?”ணு கேக்கறாங்க?”

ரமேஷ் குழம்பினார். என்ன நடக்கிறது இங்கே?

மகாவின் மனைவி எண்ணிற்கு போன் செய்தார் . மகா எடுத்தபோது சற்று பதட்டமாக இருந்தார்.

“லே. ஒரு மணி நேரம் கழிச்சி கூப்பிடுதேன்.” டக் என வைத்துவிட்டார்.  ரமேஷுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

ஒன்றரை மணி நேரம் கழித்து மகாவின் அழைப்பு வந்தது “ ஒண்ணுமில்ல. தாமஸ் மயங்கி விழுந்துட்டான். நல்ல வேளை நான் பக்கத்துலயே இருந்தனா? உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டோம். இப்ப ஒண்ணுமில்ல. படபடன்னு  வந்திருக்கு. கழுத, எத்தனை தடவசொன்னாலும், மாத்திரையை டயத்துக்கு சாப்பிட மாட்டேங்குது. இதோட ரெண்டு தடவ ஆயிட்டு பாத்துக்க. கவலைப்படாத. நான் இருக்கேம்லா?”

ரமேஷ் நிதானித்தார் “ டே, உண்மையைச் சொல்லணும். என்ன நடக்குது அங்க?”

“ஓண்ணுமில்லடா”

“பி.கே. நாய்… வந்தேம்னா செவுட்டப் பேத்துருவேன். உண்மையைச் சொல்லு. தாமஸுக்கு என்ன ஆச்சு?”

மகா மறுபுறம் நிதானித்தார் “ சரவணன் போனதுல நானும் தாமஸும் மிகவும் அதிர்ந்து போனோம். இவன் எல்லாருக்கும் தைரியம் சொல்லிட்டிருந்தான். ஆனா … ஒரு நிமிஷம் இரு. ஒண்ணு காட்டறேன் .வாட்ஸப் வீடியோ கால்ல வா”

வாட்ஸப் வீடியோ திரையில் மகா, மற்றொரு செல்லின் திரையைக் காட்டினார் “ இது தாமஸோட போன். டயல் பண்ணியிருக்கிற நம்பர் லிஸ்ட்டைப் பாரு. “

சரவணன் நாய் -என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து முறை அழைப்பு

மகா தொடர்ந்தார் “ இவன் ராத்திரி சரவணன் நம்பருக்கு போன் செய்து அழுவதைப் பார்த்து லிடியா என்  மனைவியிடம் புலம்பியிருக்கிறா. இவனுக்குத் தான் ரொம்ப தைரியசாலி என்ற நினைப்பு உண்டு. அதைக் குலைச்சிறக்கூடாது. உடைஞ்சு போயிறுவான். எப்படிச் சமாளிக்கறது?

 நான் லிடியாகிட்ட பேசிட்டு, எனக்குத்தான் மாற்றம் வேணும்னு சொல்லி இங்க வந்திருக்கேன். இவங்கூடவே எப்பவும் போறேன். வீட்டுக்கு வந்ததும் லிடியா பாத்துக்கறா. அடுத்த மாசம், இவன் ஜூனியர் இங்க வந்துறுவான். அவன் ஆபீஸ்ல கோர்ட்டுல பாத்துக்குவான். அதுவரை நான் நடிக்கணும். என்ன , லிடியாக்குத்தான் கஷ்டம். ரெண்டு சோறு வடிக்கணும்.”

மூன்று மரங்களிலொன்று விழுந்தால், மற்றது ரெண்டும் ஒன்றையொன்று தாங்கிக்கொள்ளும்.

மற்றது வீழும் வரை
 

4 thoughts on “தாங்கு மரங்கள்

  1. நல்ல நட்புகள் இப்படித்தான் இருக்கும் போல.!

Leave a Reply